‘‘படத்தின் புரமோஷனுக்கு வராத நடிகர்-நடிகைகள் மீது நடவடிக்கை எடுங்கள்…’’தயாரிப்பாளர்சங்கத்துக்கு ‘வெப்’ பட தயாரிப்பாளர் வேண்டுகோள்
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ள படம் ‘வெப்’. அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ்-ஷில்பா மஞ்சுநாத் ஜோடியாக நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி ஏனைய நட்சத்திரங்கள். கார்த்திக் ராஜா இசையமைக்க, கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு. நிர்வாக தயாரிப்பாளராகவும் மக்கள் தொடர்பாளராகவும் கே.எஸ்.கே.செல்வா.
படம் ஆகஸ்ட் 4-ந்தேதி வெளியாகும் நிலையில் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசும்போது, “அதிர்ஷ்டம் என்றாலே அது இஷ்டத்துக்கு வரும் என்பார்கள் அப்படி வந்த வாய்ப்பு தான் இது. இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ராஜ வம்சத்தில் நானும் இணைந்துள்ளேன். பாடல் எழுதத் தெரிந்த ஒரு இயக்குனருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம்” என்று கூறினார்.
பாடலாசிரியர் அருண்பாரதி பேசும்போது, “இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான் பாடல் எழுத என்னை அழைத்தார். இந்த படத்தில் நட்டியின் ஃப்ளாஷ்பேக்கில் அண்ணன் தங்கச்சிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளேன். இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். கிளைமாக்ஸ் உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இருக்கும். இந்த படத்தில் வேறொரு விதமான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் ஹாரூண்” என்று கூறினார்.
நடிகர் நட்டி பேசும்போது, “எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர். நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரைலரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும் திலீப் என்கிற பெயரில் இருந்த ஏ.ஆர் ரகுமானும் தான் அதை செய்து கொடுத்தனர். அதன்பிறகு பொன்னுமணி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்.” என்று கூறினார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நடிகர் நட்டி இருக்கும் இடம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். அவருடன் நான் பகாசுரன் படத்தில் இணைந்து சில நாட்கள் நடித்தபோது, அவரது அற்புதமான குணத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன். ஒழுக்க நெறி கொண்ட நடிகர் அவர். கடந்த ஒரு வருடமாக சின்ன படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ‘லவ் டுடே, டா டா, குட் நைட், போர்த் தொழில்’ என அந்த வெற்றி வரிசையில் இந்த படமும் இடம் பெறும்” என்று கூறினார்.
இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், “இந்த படத்தின் இயக்குனர் ஹாரூண் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நட்டியை சமூகம் என்று தான் நான் கூப்பிடுவேன். காரணம் அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் எப்போதும் நான்கு ஐந்து நண்பர்கள் அவருடன் இருப்பார்கள். எல்லோரும் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே உடன் இருந்த நண்பர்கள். வளர்ந்த நிலையில் பழைய நண்பர்களை அரவணைத்து செல்வது நட்டி போன்ற வெகு சிலர் மட்டுமே’’ என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம். அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர, அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ளாது” என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘நட்டியுடன் அவர் அறிமுகமான ‘நாளை’ உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர் தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக கேட்டு வாங்குவார்கள்’’ என்றார்.இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் எல்லாரும் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும். கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒருவிதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.