காடப்புறா கலைக்குழு படவிமர்சனம்
’காடப்புறா கலைக்குழு’ என்ற பெயரில் கலைக்குழு நடத்தி வரும் முனீஷ்காந்த், இளைஞர்களுக்கு கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் கிராமிய கலையை வளர்க்க விரும்புகிறார். அதற்காக சொந்தமாக இடம் ஒன்றை வாங்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஊர்த்தலைவர் தேர்தலில் மைம் கோபியை எதிர்த்து நிற்பவருக்கு ஆதரவாக முனீஷ்காந்த் தனது குழுவினருடன் பிரசாரத்தில் ஈடுபட, தேர்தலில் தோல்வியடையும் மைம் கோபி, தனது தோல்விக்கு முனீஷ்காந்த் தான் காரணம் என்று நினைத்து, அவரை பழிவாங்க துடிக்கிறார். இறுதியில், முனீஷ்காந்த் பழி வாங்கப்பட்டாரா, அவரது லட்சியம் நிறைவேறியதா என்பது கலகல பின்னணியிலான மீதிக்கதை.
காமெடி நடிகராக நடித்து வந்த முனீஷ்காந்த், முதல் முறையாக கதை நாயகனாகி இருக்கிறார். கிராமிய நடனக் கலைஞர் வேடத்தில் நூறு சதவீதம் பொருந்திப் போகிறவர், நகைச்சுவை காட்சிகளிலும் குறை வைக்கவில்லை என்பது சிறப்பு. குறிப்பாக அவரது ஆட்டம்பாட்டம் அற்புத ரகம்.
முனீஷ்காந்த்தின் நண்பராக நடித்திருக்கும் காளி வெங்கட்டக்கு தவில் கலைஞர் தனி அடையாளம் தருகிறது.
முனீஷ்காந்தின் தம்பியாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் பொருத்தமான தேர்வு.அவரது ஜோடியாக வரும் சுவாதி முத்து புதுவரவாக இருந்தாலும் நடிப்புலகுக்கு கிடைத்த நல்முத்து.
வில்லனாக மைம் கோபி தன் இருப்பை நிரூபிக்கிறார். ஸ்ரீலேகா ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா தங்கள் நடிப்பில் சிறந்ததை தந்திருக்கிறார்கள்.
வினோத் காந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்க, ஹென்றியின் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமை.
கிராமிய கலைகளின் பெருமைகளை சொன்னதோடு, கிராமிய கலைஞர்களின் அவல நிலையையும் பேசியிருக்கும் இயக்குநர் ராஜா குருசாமி, அதை நகைச்சுவை தளத்்தில் சொல்லி ரசிகர்களை தன் பக்கமாய் ஈர்த்துக் கொள்கிறார்.