இந்தியாவின் 7 பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தியின் ஒரு லட்சம் கோடிக்கு மேலான சொத்துக்கு ஆசைப்படுகிறது, அவரது உதவியாளர் கூட்டம். இதற்காக திட்டமிடும் அவரது செயலாளர் தேவ்கில், விஜய் குருமூர்த்தியின் தலையில் அறுவை சிகிச்சை மூலம் வேறொருவரின் மூளையைப் பொருத்தி அதன் மூலம் அவரைத் தங்கள் வசப்படுத்தி அவரது சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்.
அவர்களின் சதித் திட்டத்தின்படி பிச்சைக்காரனாக இருக்கும் சத்யாவைக் கொன்று அவனது மூளை விஜய் குருமூர்த்திக்குப் பொருத்தப்படுகிறது.
சத்யா சிறுவயதில் தனது தங்கையைத் தொலைத்து விட்டுக் கடைசி வரை தேடிக் கொண்டிருப்பவன். அவன் தனது தங்கைக்காக ஆயுதம் ஏந்திய ஒரு ஒரு முன்னாள் கொலைகாரனும் கூட. இவை சதிகாரர்களுக்குப் பிறகு தான் தெரிய வருகிறது.
இதற்கிடையே பணக்காரருக்குப் பொருத்தப்பட்ட சத்யாவின் மூளை பணம் மீது ஆர்வம் இல்லாமல் தனது பழைய வாழ்க்கையைத் தேடி அலைகிறது. ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த சதியை அறிந்து கொள்ளும் பிச்சைக்கார சத்யா, காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்ததை சொல்கிறான். அதன் பிறகு நடக்கும் திகுதிகு திருப்பங்கள் மீதிக் கதை.
பிச்சைக்கார சத்யா, கோடீசுவர விஜய் குருமூர்த்தி இரண்டு கேரக்டர்களிலும் ஏகப்பட்ட வேறுபாடு காட்டுகிறார், நாயகன் விஜய்ஆண்டனி. இதில் தங்கைப் பாசத்தில் மிஞ்சி நிற்கிற சத்யா நடிப்பில் ஒரு படி மேலேறி நிற்கிறார்.
கோடீசுவர விஜய் குருமூர்த்திக்கு முடிவு கட்டத் துடிப்பவர்களாக தேவ்கில், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.
யோகிபாபு கலகலப்பூட்டுகிறார். அரசியல்வாதி ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான் பாத்திரத்்்தேர்வுகளில் பளபளக்கிறார்கள். சிறுவர் ஜெயில் வார்டனாக ஒரிரு காட்சியில் வந்தாலும் நடிப்பு மூலம் தனி கவனம் பெறுகிறார், செந்தில்குமார்.
பிச்சைக்காரர்களின் உலகம், சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வை மற்றும் பணக்காரர்கள் உலகம் என்று இரு வேறு தன்மைகளைப் படத்தில் தெளிவாகவே காட்சிப்படுத்தி உள்ளார் விஜய் ஆண்டனி.
குழந்தைக கடத்தல் கும்பல் பற்றிய காட்சிகள், ஆதரவற்ற பெண்கள் மீது சமூகத்தின் வக்கிரம் ஆகியவற்றை பதைபதைப்பான காட்சிகளின் மூலம் சொன்னவர், ‘ஆன்டி பிகினி’ என்ற தலைப்பில் சமூகக் கருத்தையும் விதைத்துள்ளார்.
ஓம்.நாராயணனின் ஒளிப்பதிவும் விஜய் ஆண்டனியின் இசையும் கதையோடு இணைந்து பிரமாண்டம் காட்டுகிறது. முதல் பாகத்தில் அம்மா-மகன் சென்டிமென்ட்டில் நெகிழ வைத்தவர், இயக்கிய சசி. இரண்டாம் பாகத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துக்கொண்டு துணிச்சலாக இயக்கத்தையும் தொட்டு நடை போட்டிருக்கிறார், விஜய் ஆண்டனி. அதுவும் வெற்றி நடை என்பது ஆனந்த ஆச்சரியம்.