திரை விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரை விமர்சனம்

உலகமே கொண்டாட விரும்பும் ஒரு இசைக்கலைஞனாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அதற்கான அழைப்புக்காக காத்திருக்கும் ஒரு இலங்கை அகதி, தனக்கு நேரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து வெற்றி இலக்கை அடைய முடிந்ததா என்ற ஒரு வரிக் கதைக்கு திரை வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
இலங்கையின் மோசமான போர் சூழலில் ஆதரவற்ற சிறுவன் புனிதனின் இசையார்வம் தெரிந்து பாதிரியார் ஒருவர் லண்டனில் உள்ள இசைப் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதற்காக செல்லும் வழியில் ராணுவத்தினர் பிடியில் மாட்டி சிறையில் அடைக்கப்படுகிறான். விடுதலையாகி கேரளா செல்பவன், அங்கே இசைக்கருவிகள் செய்யும் கடையில் பணியில் சேர்கிறான். அவன் இசையாற்றலை புரிந்து கொள்ளும் கடை முதலாளி அவனை உற்சாகப்படுத்த… லண்டன் இசைப்பள்ளி நடத்தும் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான். எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும் இல்லாததால் நிராகரிக்கப்படுகிறான்.

ஒரு கட்டத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்துக்கு வரும்போது அவனை போலீஸ் கைது செய்கிறது. ஆனால் அதையும் தாண்டி அந்த இசைப்போட்டியில் கலந்து கொண்டானா? என்பது இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிளைமாக்ஸ்.

கிருபாநிதி என்ற பெயரில் கொடைக்கானலுக்கு வரும் ஹீரோ விஜய் சேதுபதிக்கு அங்குள்ள ஒரு தேவாலயத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக்குழு மற்றும் பாதிரியார் (விவேக்) ஆகியோருடன் அறிமுகம் ஏற்படுவது போல் கதையை தொடங்குகிறார்கள்.
இலங்கை அகதி புனிதனாக அறிமுகமாகி கிருபாநிதியாக மாறும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், விஜய்சேதுபதி.
அகதி என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலி நிறைந்த வாழ்க்கையை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வெடி சத்தங்களை கேட்டு பயப்படுவது, தனக்கான அடையாளத்தை தேடி அலைவது, திறமை இருந்தும் அகதி என்பதற்காக நிராகரிக்கப்படும்போது உணரும் வலி, என்று பல இடங்களில் காண்போரை கலங்க வைக்கும் நடிப்பு இயல்பாகவே பீறிடுகிறது. இலங்கைத் தமிழில் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு அவரது பதிலில் வலி நிறைந்த நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது. இசை விழா மேடையில் அவரது ஆற்றாமை பேச்சு, கையறு நிலையில் உள்ள ஒரு அகதியின் அவதியை நெஞ்சுக்குள் இறக்கி வைத்து விடுகிறது விடுகிறது. கனிகாவிடம் அவரது தம்பிக்கான அடையாளத்தை தனக்கு தர விஜய்சேதுபதி கெஞ்சும் இடத்தில் அந்த உடல்மொழியேஆயிரம் வலிகளை பேசி விடுகிறது.
இலங்கை தேவாலய பாதர் ராஜேஷ், கொடைக்கானல் தேவாலய பாதர் விவேக், புனிதனுக்கு உதவும் இலங்கைத் தமிழர் கரு.பழனியப்பன் என ஆங்காங்கே வரும் சில கதாபாத்திரங்கள் கதையின் கனத்தை நமக்குள் விதைத்து விடுகின்றன.
விஜய் சேதுபதியை காதலிக்கும் மேகா ஆகாஷ், காதலில் கசிந்துருகும் காட்சிகளில் கவர்கிறார்.

விஜய்சேதுபதியை வேட்டையாடத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் மகிழ் திருமேனிக்கு வன்மம் நிறைந்த கதாபாத்திரம். அதை சுலபமாக செய்து விடுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள மக்கள் இரக்கமின்றி நடத்தப்படுவது, அகதி அடையாளஅட்டைகளை வாங்கப் பல இன்னல்களைச் சந்திப்பது, அகதிகளின் வாழ்க்கை முழுவதும் பின்தொடரும் ‘கியூ’ பிரான்ச் போன்ற விசாரணை அமைப்புகளால் ஏற்படும் தொந்தரவு, முக்கியமாக, அகதிகள் முகாமில் தங்கி கல்வி கற்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு சட்டரீதியாகவே மறுக்கப்படுவது வரை சொல்லியிருக்கிற துணிச்சலுக்காகவே இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்தை கொண்டாடலாம்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அகதிகளின் அவதியை நமக்குள் கடத்த உதவும் கூடுதல் காரணிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *