ருத்ரன் பட விமர்சனம்
அன்பான பெற்றோர், காதலில் கிடைத்த தேவதை மனைவி என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தில் அப்பாவின் நண்பர் செய்த நம்பிக்கை துரோகத்தால் பெரிய கடன் வந்து அதிர்ச்சியூட்டுகிறது. கடனை அடைக்க வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன். அதற்காகவே காத்திருந்த மாதிரி ருத்ரனின் மொத்த குடும்பமும் வில்லன் ‘பூமி’யால் கொல்லப்பட…
வில்லன் பூமி யார்? அவர் ஏன் ருத்ரனின் குடும்பத்தை அழித்தார்? பூமியை ருத்ரன் பழிவாங்கினாரா என்பதை எளிதில் யூகிக்கும்படியான மசாலா திருப்பங்களுடன் திரைக்குத் தந்திருக்கிறார், இயக்குனர் பைவ் ஸ்டார் கதிரேசன்.
வழக்கம் போல் டான்ஸ், அதிரடி என ஒப்புக்கொண்ட கதைக்கு வஞ்சனையில்லாமல் ருத்ரன் கேரக்டரில் கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார், லாரன்ஸ். இந்த படத்திலும் அவருக்கான பஞ்ச் வசனங்கள் உண்டு. அதை சரியான இடங்களில் பேசி கரகோஷம் வாங்குகிறார். கிளைமாக்சில் ‘பூமி’ சரத்குமார் அண்ட்கோ’ வை வெளுக்கும் இடத்தில் அடி ஒவ்வொன்றும் இடியாய் இறங்குகிறது.
நாயகி ப்ரியா பவானி சங்கர் வழக்கமான காதல் நாயகியாக வந்து முடிவில் நெகிழ வைக்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும் காளி வெங்கட் நட்பு நடிப்பில் முத்திரை பதித்து விட்டுப் போகிறார். வில்லனாக வரும் சரத்குமார் இனி இம்மாதிரி கேரக்டர்களில் தாராளமாக வலம் வரலாம். அந்த வில்லத்தனமும் அதில் வெளிப்படும் ஆவேசமும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயமுறுத்தி வைக்கிறது. குறிப்பாக பிளாஷ்பேக்கில் நடிப்பு ரொம்்பவே ஸ்பெஷல்.
நல்ல போலீசாக இளவரசு நிறைவாக செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸின் பெற்றோராக நாசர்-பூர்ணிமா சிறப்பு.
ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் மனதை வருடுகிறது. சாம் சிஎஸ்.சின் பின்னணி இசை வழக்கம் போல் இரைச்சல் ரகம்.
தயாரிப்பாளர் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசனுக்கு இயக்கத்தில் இது முதல் படம். அடிதடி கரம் மசாலா கதை மூலம் கம்ர்ஷியல் இயக்குனர்கள் வரிசையில் இணைந்து கொள்கிறார்.
ருத்ரன், அதிரடி சரித்்திர பட வரிசையில் அட்டகாச இணைப்பு.