Latest:
திரை விமர்சனம்

விடுதலை பட விமர்சனம்

பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அரசின் துணையுடன் தங்கள் வசப்படுத்த நினைக்க, அதற்கு தடையாக இருக்கிறது ‘மக்கள் படை’ என்ற பெயரில் இயங்கும் இளைஞர் அமைப்பு. இந்த படைக்கு தலைவனான பெருமாள் வாத்தியாரை பிடிக்க அரசாங்கம் சிறப்பு காவல் படை ஒன்றை உருவாக்கி அந்த கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதில் ஆச்சரியம், பெருமாள் வாத்தியாரின் முகத்தை கூட அதுவரை இந்த முகாமில் தங்கியிருக்கும் போலீசார் பார்த்ததில்லை என்பது தான்.
இதேநேரம் அந்த போலீஸ் டீமுக்கு டிரைவராக குமரேசன் என்ற கான்ஸ்டபிள் வருகிறார். வந்த சில நாட்களில் இவருக்கும் மலைப்பகுதி இளம்பெண் தமிழரசிக்கும் இடையே காதல் நெருப்பு பற்றிக்கொள்ள…
இந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதி மக்களிடையே தான் பெருமாள் வாத்தியார் இருப்பதை குமரேசன் தெரிந்து அதை மேலதிகாரியிடம் சொல்ல முயல்கிறார். மேலதிகாரியோ அவரை சொல்ல விடாமல் ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
இந்த நேரத்தில் மக்கள் படை அமைப்பை முழுமையாக வேட்டையாடி அதன் தலைவர் பெருமாளை பிடிக்க அரசாங்கம் சுனில்மேனன் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரியை களம் இறக்குகிறது. அவரது அணுகுமுறையில் மலைப்பகுதி மக்களின் ஆதரவு மக்கள் படைக்கு பரிபூரணமாக இருப்பது தெரிய வர…அவர்களை கும்பலாக அள்ளி வந்து கொடும் சித்ரவதை செய்கிறது போலீஸ்.
இப்படி சித்ரவதைக்குள்ளானவர்களில் குமரேசனின் காதலியும் இருப்பது தெரிய வர…காதலி உள்ளிட்ட அப்பாவி பெண்களை காப்பாற்ற ஒரே வழி, பெருமாள் வாத்தியாரை பிடித்து போலீசிடம் ஒப்படைப்பது தான். அதற்காக போலீஸ்கார குமரேசன் எடுக்கும் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையே விடுதலை பாகம்-1.
போலிஸ் கான்ஸ்டபிள் குமரேசன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சூரி. ‘இதுவரை காமெடி பண்ணிய சூரி வேறு. இவர் வேறு’ என்பதை நடிப்பால் நமக்கு கடத்தி விடுகிறார். மனிதநேயமிக்க போலீசாக அவர் செய்யும் ஒவ்வொரு செயலுமே அவருக்கு காவல்துறையில் தண்டனை வாங்கித் தர, அந்த இடங்களில் சூரியின் அலட்டாத நடிப்பு லட்டு. மலைவாழ்பெண் பவானிஸ்ரீயின் அன்புக்குள் மெல்ல மெல்ல விழும் இடங்களில் அந்த காதல் அத்தனை அழகு. காதலி கொடுத்த சாப்பாட்டை தன் அம்மாவின் அன்போடு ஒப்பிடும் இடத்தில் நெகிழவும் வைக்கிறார். மேலதிகாரி மூணாறு ரவி, ‘இப்ப என்னை அடிக்கணும் போலிருக்குமே?’ என்று கேட்கும் இடத்தில் அலட்டாமல் ‘ஆமாம் சார்’ சொல்கிற சூரியின் நடிப்புக்கு மொத்த அரங்கும் கை தட்டுகிறது.
மலைவாழ் பெண்ணாக வந்து சூரியை அன்பால் ஈரக்கும் கேரக்டரில் பவானிஸ்ரீ, இ்ன்னொரு நடிப்பு ஆச்சரியம். எந்த இடத்திலும் இவரை அந்த கேரக்டராகவே உணரமுடிவது சிறப்பு.
மக்கள் படை இயக்கத்தின் தலைவனாக வரும் வாத்தியார் விஜய் சேதுபதிக்கு சில காட்சிகளே என்றாலும் அந்த கம்பீரம் தனிச்சிறப்பு.
சிறப்புப்படை ஹெட்டாக சேத்தன் காட்டுவது காக்கியின் இன்னொரு கொடூர முகம். அதில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார். டிஎஸ்பியாக கவுதம்மேனன், தலைமைச்செயலாளராக ராஜீவ் மேனன் நடிப்பின் இன்னொரு தளத்தில் கோலோச்சுகிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்ல, ‘காட்டு மல்லி’ பாடலிலும், பின்னணி இசையிலும் இளையராஜா இதயம் பதிகிறார்.
மலைவாழ் மக்களை காவல்துறை கொடூரமாக கையாளும் இடங்களும், போராளிகளின் வலிகளும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டு நெஞ்சம் கனக்க வைக்கிறது. காவல் நிலைய விசாரணையில் விஜய்சேதுபதியை போலீஸ் அதிகாரி கவுதம்மேனன் கேள்வி கேட்பதும், அதற்கு விஜய்சேதுபதியின் பதிலும் இதுவரை பார்த்்திராத சினிமா. ஆ
ரம்ப ரெயில் விபத்து காட்சியில் நிஜமாகவே நாமும் அங்கிருப்பது போல் மாயம் நிகழ்த்துகிறது வேல்ராஜின் கேமரா.
விடுதலை, திரையில் எப்போதாவது நிகழும் இயற்கை அற்புதம்.