2017-ல் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்கு தந்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டு அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் அளவுக்கு பவரில் இருக்கும் சிம்பு, முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விடுகிறார். இதை கண்டுபிடிக்க அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் சிம்புவிடம் அடியாளாக சேர்கிறார். தனது அதிரடி செயல்களால் சிம்புவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். இந்நிலையில் தனது அடுத்தகட்ட ரகசிய முயற்சியில் காணாமல் போன முதலமைச்சரை கண்டுபிடித்தாரா? சிம்பு ஏன் முதலமைச்சரை கடத்த வேண்டும்? உண்மையில் கௌதம் கார்த்திக் யார் என்பதை சிம்பு கண்டுபிடித்தாரா? கேள்விகளுக்கு பதில் அதிரடியுடன் கூடிய விறுவிறு திரைக்கதை.
மணல் மாபியா ஏஜிஆர் என்ற கேரக்டரில் சிம்பு படம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு காட்சியில் முகம் காட்டாமல் அறிமுகமாகிறவர், அப்புறம் எப்போது வருவார் என்ற எதிர்பார்க்க வைத்து, இடைவேளை சமயத்தில் தான் திரையை ஆக்கிரமிக்கிறார். முடிவு வரை அதிர் வேட்டு தான் நடிப்பில். எனர்ஜி குறையாத அந்த வேகம் சூப்பர்ப். துரோகிகளை அப்போதே வேரறுக்கும் தாதாவாக மிரட்டுபவர், தங்கை பாசத்தில் உருகும் இடங்களில் நிஜமாகவே ஜில்லுன்னு ஒரு காற்று திரை தழுவி நம் இதயம் வரை தொட்டுப் போகிறது. தனக்கு எதிரே வரும் கவுதத்தை பார்த்த மாத்திரத்தில் பார்வையால் என்னவென்று கேட்கும் இடத்தில் அந்த புருவம் கூட நடிக்கிறது. வாயில் கத்தியுடன், வேட்டியை மடித்துக் கட்டும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது.

படம் முழுக்க வரும் கவுதம்கார்த்திக் தன் நடிப்பால் கவர்கிறார். சிம்புவின் நம்பிக்கையை பெறுவதற்கான அவரது ஒவ்வொரு அணுகுமுறையும் அற்புதம். முன்னாள் காதலியான தாசில்தார் பிரியா பவானி சங்கரை சந்திக்கும் இடங்களில் அந்த கெமிஸ்ட்ரி வேறு வகை காதல் பாடம். தேரை இழுக்கும் சிம்புவை சுற்றிலும் எதிரணி ஆயுதங்களுடன் கொல்லப் பாய்ந்து வரும் இடத்தில் கவுதமின் அதிரடி பாய்ச்சல் வேறு லெவல்.

தாசில்தார் கேரக்டரில் வரும் பிரியா பவானி ஷங்கரின் சிம்புவுக்கு எதிரான ஆரம்ப கட்ட மனநிலை ஒரு விதம் என்றால், அதே சிம்புவை பார்த்து கையெடுத்து வணங்கும் இடம் இன்னொரு விதம். இரண்டிலும் ஏகப்பட்ட நடிப்பு வேறுபாடு காட்டுகிறார். கவுதம் கார்த்திக்குடனான அந்த காதல் பிளாஷ்பேக் கொஞ்சமே என்றாலும் நெஞ்சில் நிற்கிறது.

சிம்புவின் தங்கையாக அனு சித்தாரா, தன் பொருத்தமான தேர்வை நிரூபிக்கிறார். கலையரசன், சந்தோஷ் பிரதாப், சென்ராயன், சிம்புவின் வலது கையாக வரும் மது குருசாமி, ஜோ மல்லூரி கேரக்டரில் நின்று நிலைக்கிறார்கள். காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லி. இவர் துப்பாக்கி தூக்கினாலும் நமக்கு வருவது சிரிப்புத் தான்.

சிம்பு கோட்டையில் அடியாள் போர்வையில் இருக்கும் கவுதமை போலீஸ் என தெரிந்து கொண்ட இன்னொரு அடியாள் கண்ணன் பொன்னையா சம்பந்தப்பட்ட அந்த குட்டி போர்ஷன் எதிர்பாராத திருப்புமுனை காட்சி. இதில் தேர்ந்த நடிகராக கண்ணன் பொன்னையாவும் கண்ணில் நிற்கிறார்.

சாயிஷா ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் சுகானுபவம். பரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு உலகத் தரம். குறிப்பாக இரவு நேர காட்சிகள், கார் சேசிங் மிரட்டல் வகை.

ஒரு அண்டர் கவர் ஆபீசர் – மிகப்பெரிய தாதா இடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அரசியல் பின்னணியில் ரத்தம் தெறிக்க சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா. முதல் பாதி எதிர்பார்ப்பும் மறுபாதி விறுவிறுப்புமான இயக்கத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/FrfcXPfWcAAuhcl-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/FrfcXPfWcAAuhcl-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்2017-ல் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்கு தந்திருக்கிறார்கள். கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டு அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் அளவுக்கு பவரில் இருக்கும் சிம்பு, முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விடுகிறார். இதை கண்டுபிடிக்க அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் சிம்புவிடம் அடியாளாக சேர்கிறார். தனது அதிரடி செயல்களால் சிம்புவின்...