சென்னை போலீஸ் கமிஷனரின் வீட்டில் அவர்கள் வீட்டு செல்லப்பிராணியான நாய் காணாமல் போக, நகரம் முழுவதும் போலீஸ் அலர்ட்டாகிறது. இந்த நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யாத ஒரு எம்.எல்.ஏ.வைக் கொல்கிறது, ஒரு இளைஞர் கூட்டம். தன் மகளை ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுத்து விட்டு கைவிட்ட பெரிய இடத்து இளைஞனை போட்டுத் தள்ளுகிறார், அப்பா வையாபுரி.

நாளை திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் டாக்டர் வித்யாவின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாகச் சொல்லி மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.

கொரோனாவால் தொழில் முடங்கிப் போனதால் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஒப்பனைக் கலைஞன் தன் மகனின் ஸ்கூல் பீஸுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு அபார்ட்மெண்ட்டில் திருட ஆதவனும், அவரது சிஷ்யனும் வருகிறார்கள்.

தனக்குப் பிறந்த குழந்தையைக் கூட பார்க்க போக முடியாமல் நைட் டூட்டி என்று மாட்டிக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் நிகில் முருகன்..

இவர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதை தான் இந்தப் ‘பவுடர்’.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் தாடியுடன் தோன்றி காட்சிக்கு காட்சி அதிரடி காட்டியிருக்கிறார், முன்னணி மக்கள் தொடர்பாளர் அறிமுக நடிகர் நிகில் முருகன். விசாரணை கைதிகளிடம் மிரட்டல் குரலில் விசாரணை நடத்துவதும்.. மேலதிகாரிகளிடத்தில் தன்மையாக இடமறிந்து பேசும்விதமும் என ஒரு வித்தியாசமான நடிப்புப் பாணி உருவாக்கி முதல் படத்திலேயே ஆச்சரியப்படுத்துகிறார். அடுத்த படத்தை எதிர்பார்க்க வைக்கிறார்.
படத்தில் முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப், சரியான தேர்வு. ஒப்பனைக் கலைஞராக இயக்குனர் விஜய்ஸ்ரீ நெகிழ வைக்கிற நடிப்பு. சிங்கம்புலி, சிசர் மனோகர், மொட்டை ராஜேந்திரன், சில்மிஷ திருடர்கள் ஆதவன்-சிவா ஆகியோரும் பொருத்தமான தேர்வில் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
ராஜா பாண்டியின் கேமரா கொரோனா காலத்தில் உருவான இரவுக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது. இசையில் இன்னமும் அக்கறை காட்டி இருக்கலாம்..
ஊடகவியலாளர்கள் ஒற்றன் துரை, ராயல் பிரபாகர், சதீஷ் முக்கிய பாத்திரங்களில் தோன்றி, நிறைவான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.
மின்சார ஒயர்களை அணில் கடிப்பது, காவல் வாகனம் சைரன் அடித்துக் கொண்டே வருவது ஆகிய காட்சிகளில் வசனங்களில் உஷ்ணம் அதிகம். ஒரு இரவில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் ஒரே நேர்கோட்டில் நிலைப்படுத்தும் காட்சியில் திறமை காட்டியிருக்கிறார், இயக்கிய விஜய் ஸ்ரீஜி. மனிதக்கறி தொடர்பான காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது.