தமிழ் ராக்கர்ஸ்- வலைதளத் தொடர் விமர்சனம்

இந்திய அளவில் திரைப்பட தயாரிப்பு தொழிலில் மூத்த நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏ வி எம் நிறுவனத்தின் நான்காம் தலைமுறையைச் சார்ந்த அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் தயாரித்திருக்கும் முதல் வலைதள தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களை, வெளியான அன்றே சட்ட விரோதமான முறையில் பதிவேற்றம் செய்யும் திருட்டு இணையதளமான ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் இணையதளத்தை மையப்படுத்தி, அதே பெயரில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடர் ரசிகர்களை கவர்ந்ததா? கவருமா? என்பதை இனி காண்போம்.
சினிமாவும் நுகர்வோர் விரும்பும் கலாச்சாரப் பொருள்தான். இந்த பொருளை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்குகள் இவர்களின் வழியாக பார்வையாளர்களை சென்றடையும் நுகர்வோர் பொருள். இதனை தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம், திருட்டுத்தனமாக தங்களுடைய இணைய பக்கத்தில் பதிவேற்றி, பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதன் காரணமாக பார்வையாளர்கள் குறுக்கு வழியில் படைப்புகளை பார்வையிடுகிறார்கள். இதனால் திரை உலகினர் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும், முதலாளிகளும், முதலீட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சிலர் தாங்க முடியாத பொருளாதார சுமை காரணமாக தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த தசாப்தங்களில் ஏன் இன்றும் கூட தமிழ் ராக்கர்ஸின் இந்த குறுக்கு வழியிலான திருட்டுத் தொழில் தொடர்கிறது. இதனை அரசாங்கம், காவல்துறை, இணையதள குற்றத் தடுப்பு பாதுகாப்பு பிரிவு ஆகியோரின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்த இயலுமா..! என்பது குறித்து, இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்னும் வலைதள தொடர் முயற்சிக்கிறது.
புலனாய்வு பாணியிலான திரைக்கதை பார்வையாளர்களை சுவாரசியமாக காண வைத்தாலும், எட்டு அத்தியாயங்கள் வரை நீள்வதால்… பல தருணங்களில் தொய்வும், சோர்வும் ஏற்படுகிறது. திரை துறையில் இருக்கும் நட்சத்திர நடிகர்களின் அந்தரங்க உதவியாளர், தயாரிப்பாளரின் கார் ஓட்டுநர், படத்தின் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் முதன்மை உதவியாளர்கள், நடிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட கலைஞர்கள், நட்சத்திர நடிகர்களின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், இயக்குநரின் உதவியாளர்கள்…. என திரைத்துறையில் பணியாற்றும் நபர்களே தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளத்திற்கு சுயநலத்தின் காரணமாக ஆதரவளிக்கிறார்கள் என மூன்று ஆண்டுகள் கள ஆய்வு செய்து, திரைக்கதை ஆசிரியர் மனோஜ் குமார் கலைவாணன் எழுதியிருப்பது திரை உலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
எட்டு அத்தியாயங்களுகளுடனான இந்த தொடரை இயக்குநர் அறிவழகன் கதையின் மையப்புள்ளியை மட்டும் முன்னிறுத்தி இயக்கியிருக்கிறார். தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்க நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களை பயன்படுத்தி இருப்பது புத்திசாலித்தனமான உத்தி என பாராட்டினாலும், அந்த நட்சத்திர நடிகரின் அந்தரங்க உதவியாளரை வில்லனாக காட்டி இருப்பது முரண்.
புலனாய்வு அதிகாரியாக அருண் விஜய் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா மேனன் சில இடங்களில் சமந்தாவை நினைவு படுத்துகிறார். வாணி போஜன் பல இடங்களில் முகச்சோர்வுடன் உற்சாகமின்றி காணப்படுகிறார். எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல் தன் நடிப்பு திறமையை ரசிகர்கள் விரும்பவில்லை என்றாலும் திகட்ட திகட்ட வழங்குகிறார்.
தமிழ் திரையுலகை ஸ்தம்பிக்க வைத்த தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்தலாமே தவிர, அவர்களை கண்டுபிடித்து முற்றாக அழிக்க முடியாது என முடித்திருப்பது ஏனென்று தெரியவில்லை. இருப்பினும் தமிழ் ராக்கர்ஸ் எனும் வலைதள தொடர் மூலம் ரசிகர்கள், திரைப்படங்களை இனி திரையரங்குகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என உறுதிமொழி ஏற்பார்கள் என்பது உறுதி.
தமிழ் ராக்கர்ஸ்- கிரியேட்டிவ் கிராக்கர்ஸ்
