திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்

நட்புக்கும், காதலுக்குமான எல்லைக்கோட்டை உரசிக்கொண்டு விபத்தின்றி ஏற்கனவே சில படங்கள் வந்திருந்தபோதிலும், இந்த படம் அதற்கெல்லாம் பாடம்.
நமக்குப் பக்கத்திலேயே பேரன்பு காட்டுவோர் இருந்தாலும், அதை உணர்ந்து கொள்ளாமல் வெளி அன்புக்கு மனசு கிடந்து அலையுமில்லையா…அப்படித்தான் நம்ம நாயகன் தனுஷ் அலைகிறார். கல்லூரிக் காலத்தில் பழகிய பெண் மீது காதல். அது செட்டாகவில்லை என்றதும் கிராமத்தில் பார்த்த ஒரு பெண் மீது அடுத்த காதல். இந்த ரெண்டு காதலுக்குமே மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுப்பது தனுஷின் தோழி நித்யா மேனன் தான். இரண்டு காதலுமே வேலைக்காகாத நிலையில், நாம் தேடிக்கொண்டிருக்கிற பேரன்பு பெட்டகம், நம் கூடவே இருக்கிற நித்யா மேனன் தான் என்று தனுஷ் உணரும் வேளையில் நடக்கிற அதிரடி திருப்பம், உணர்வும் உலைக்களனுமான கிளைமாக்ஸ்
தனுஷுக்கு பலமே, பார்க்க பக்கத்து வீட்டு இளைஞன் தோற்றம் தான். அந்தத் தோற்றம் சமீபமாக தனுஷின் படங்களில் அமையவில்லை. அதை அழகாக பயன்படுத்தியிருக்கிறார், இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் தனுஷின் நடிப்பு அப்படியே மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது. நித்யா மேனனுடனான நட்பு, அப்பாவுடன் முறைப்பு, தாத்தாவிடம் பிரியம் என அவரது நடிப்பு எல்லைகள் காட்சிக்கு காட்சி விரிந்து கொண்டே போகும் வியப்பு படம் முழுக்கவும் நீடிக்கிறது.
தனுஷுக்கு அடுத்ததாக படத்தில் முக்கியமான ரோல் பாரதிராஜாவுடையது. அவருக்கும் தனுஷுக்குமான தாத்தா-பேரன் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. குறும்புத்தனம், எமோஷனல் என எல்லா எரியாவிலும் தாத்தா-பேரன் கூட்டணி கலந்து கட்டி அடிக்கிறார்கள். அதிலும் தாத்தா பாரதிராஜா தனது காதலிகள் பட்டியலை சொல்ல, அதற்கு தனுஷ் அடிக்கும் கவுண்டர் தியேட்டர்களை சிரிப்பில் மினி பூகம்ப லெவலுக்கு குலுங்க வைக்கிறது.
தனுஷின் அப்பாவாக பிரகாஷ் ராஜ் தனது நடிப்பில் வழக்கம்போல் அதகளம் பண்ணுகிறார். காதல் பாத்திரங்களாக வரும் ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் வந்து போகிறார்கள். மனதில் நின்று போகிறார்கள்.
படத்தில் அத்தனை பேரையும் நடிப்பால் தூக்கி சாப்பிட்டிருப்பது தோழி நித்்யா மேனன் தான். தனுஷூடனான அந்த அன்யோன்ய நடிப்புக்கு கர்சிக்கு காட்சி அழகு சேர்க்கிறார், இந்த நடிப்பு ராட்சசி. பிரகாஷ் ராஜிடம் மல்லுக்கட்டுவது, பாரதிராஜாவிடம் உரிமை பாராட்டுவது, தோழனின் காதலுக்கு தோள்கொடுப்பது என மனுஷி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். விமானத்தில் ஏறிய நிலையில் அவர் குலுங்கி அழும் காட்சியில் கண் துடைக்க கர்ச்சீப்பை தேடாதவர்கள் தான் யார்?
காமெடிக்கு முனீஷ்காந்த்-அறந்தாங்கி நிஷா. நித்யாமேனனின் அம்மாவாக ஸ்ரீரஞ்சினி, தனுஷின் அம்மா வழி தாத்தா-பாட்டி இயல்பான கேரக்டர்களில் மிளிர்கிறார்கள்.
அந்த தாய்க்கிழவி பாடலில் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடிய தனுஷூம் கொண்டாட வைக்கிறார்கள். ஓம்பிரகாஷின் கேமரா அழகான கதைக்கு அமைந்த ஒளிவிளக்கு.
காதலுக்கும் நட்புக்கும் இடையில் பாலம் அமைத்து புதுப்பயணத்துக்கு வித்திட்டிருக்கிறார், இயக்கிய மித்ரன் ஜவகர்.
