வார்டு-126 பட விமர்சனம்

திரை விமர்சனம்

நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்னு மேனன், ஷிரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா
தயாரிப்பு: எஸ்.எஸ்.பி. டாக்கிஸ்
இசை: வருண் சுனில்
ஒளிப்பதிவு: எஸ்.கே.சுரேஷ்குமார்
இயக்கம்: செல்வகுமார் செல்லப்பாண்டியன்.
வார்ட் எண் 126 பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் துர்நாற்றம் வீச, பக்கத்து வீட்டு நபர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். போலீஸ் வந்து பார்க்கும்போது மைக்கேல் என்ற வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு நாள் ஆனது தெரிய வருகிறது. பிணத்தை கைப்பற்றி அக்கம்பக்கத்தாரிடம் நடத்திய விசாரணையில், கொலையான நபரின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றது தெரிகிறது. அவரிடம் போலீஸ் விசாரிக்கும்போது வேறு பெண்ணுடன் கொலையான நபர் உறவில் இருந்தது தெரிய வர… அந்த பெண்ணை கண்டுபிடித்து விசாரிக்கும்போது கொலைக்கான எந்த பின்னணியும் கிடைக்காமல் போக… கொலைகாரனை போலீஸார் கண்டுபிடித்தார்களா என்பது விறுவிறுப்பு பிளஸ் டுவிஸ்டுடன் கூடிய கிளைமாக்ஸ். .
வீட்டுக்கு பார்சல் டெலிவரி கொடுக்க வரும் நபர் திடீரென்று மைக்கேலை கத்தியால் குத்தியதும் கதையில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது.
காதல் தம்பதிகளான ஜிஷ்ணுமேனன்- ஷிரிதா சிவதாஸ் வாழ்க்கையில் மைக்கேலின் இடப்பெயர்ச்சி எத்தகையது என்பதை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சொல்லியிருக்கிற திரைக்கதை தான் படத்தின் நிஜ நாயகன்.
கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது நம் ஆச்சரியம் பன்மடங்காகிறது. நடித்தவர்களில் மைக்கேல் தங்கதுரை ஜித்தனுக்கு ஜித்தன் என்றால், ஜிஷ்னு மேனன் எத்தனுக்கு எத்தன். கணவனுக்கு இன்னொரு மனைவி என தெரியவரும் இடத்தில் வித்யா பிரதீப்பின் விரிந்த விழிகள் ஏற்படுத்திய அதிர்ச்சி இ்ப்போதும் கண்ணில் நிற்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார். கூர்மையான அந்த விசாரணை வளையம் கவர்கிறது. சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிக்காத்திருப்பது அப்ளாஸ் பெறுகிறது.
வருண் சுனில் இசையும், எஸ்.கே.சுரேஷ் குமார் ஒளிப்பதிவும் இந்த சஸ்பென்ஸ் கதைக்கு சரிவிகித பங்களிப்பு. முடிவு வரை எதிர்பார்ப்புடன் கதையை கொண்டு சென்ற இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியனை ரெட் ்கார்ப்பெட் விரித்து தமிழ் சினிமா வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *