சினிமா செய்திகள்

இனி சாய்ந்து படுத்து விட மாட்டேன் -விக்ரம் பட வெற்றி விழாவில் கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், விக்ரம் படத்தின் தமிழக வினியோகஸ்தரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், வினியோகஸ்தர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கே.ஆர். மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கொண்டார்கள்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் “இந்தப் படத்தின் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. சினிமா தெரிந்தவர்களுக்கு அது தெரியும். Raj kamal Film International என்பதன் சுருக்கமான நான்கெழுத்து RKFI. இந்த நான்கு எழுத்தின் பின்னால் 40 பேர் இருக்கிறார்கள். முக்கியமாக மூன்று பேர். அதில், சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பியுள்ளார்கள். பெயர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சினிமாவில் வேலை கிடைத்தால் போதும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. ஆனால் நடிப்பை எனக்கு காட்டியவர் பாலசந்தர். ‘ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கித் தரேன். நீ நடி. அப்புறம் பாரு’ என்று அவர் தான் என்னை நடிக்க வைத்தார். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்கள் செய்தால் போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்தார்கள்.

கடந்த பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இது மட்டுமே. அதற்கு காரணம் மகேந்திரனும், உதயநிதி ஸ்டாலினும் தான். இவர்கள் உடன் இருந்ததால் தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், அரசியலில் இருந்தாலும் பட விநியோகத்தை மட்டும் விட்டு விட வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால், இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சினிமா துறைக்கு அவசியம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி செய்யும்போது என்னை நிறைய பேர் கிண்டல் அடித்தார்கள். எனக்கு நெருக்கமானவர்கள் கூட என் கையைப் பிடித்துக் கொண்டு ‘சின்னத்திரைக்கு செல்லாதீர்கள்’ என்றார்கள். ஆனால் அங்கு சென்றதன் பலன் என்னால் பல வீடுகளுக்கு செல்ல முடிந்தது. என்னுடைய புரமோஷன் கூட பிக் பாஸ்ஸில் தான் இருந்து ஆரம்பித்தது. விக்ரம் வெற்றி எளிதாக வந்ததில்லை. அதனால் நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக் கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ’’ஊரடங்குக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தை பொறுமையாக எழுத நேரம் கிடைத்தது. வேலையை பகிர்ந்து செய்து கொண்டு இருந்தோம். கமல் சார் பங்கு இல்லை என்றால் வெற்றி சாத்தியம் இல்லை. கமல் சார் எனக்கு கொடுத்த மிகப்பெரிய அறிவுரை என்னவென்றால், படம் வெளியான உடன் செல்போனில் அழைத்து அரை மணி நேரம் பேசினார். படம் வெற்றி பெற்று விட்டது, இனி உடனடியாக அடுத்த படத்திற்கான வேலைகளை பார் என அறிவுறுத்தினார். அதைத்தான் நான் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன். அடுத்த படத்தை ஏனோ தானோவென்று எடுக்க மாட்டேன். கூடுதல் பொறுப்புடன் நீங்கள் கொடுத்த கூடுதல் நம்பிக்கையுடன் எடுப்பேன்” என்றார்.
முன்னதாக விக்ரம் படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது “இந்த படத்தை கமல் சார் எனக்கு முதலில் காண்பித்தார். இடைவேளை வந்தபோதே நான் ஆச்சரியமாக உணர்ந்தேன். அப்போதே என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தேன். இந்த வகையில் இந்த படத்தின் முதல் விமர்சகர் நான் தான் என்பதில் பெருமையாக உள்ளது. படம் வெற்றி பெறும் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்க வில்லை..
விக்ரம் திரைப்படத்தை 7 முறை பார்த்து விட்டேன்.
எல்லோரும் படத்தின் வசூல் பற்றி அறிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு விநியோகஸ்தராக நான் இப்போது அறிவிக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் ஷேராகவே 75 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத வசூல். இன்னும் 3 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும். இப்போதும் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் எனக்கு போன் செய்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய போது, இந்த ரயிலில் கடைசியாக ஏறிய பயணி நான் என சொன்னேன். இப்போது தான் தெரிகிறது. நான் ஏறியது ரயில் இல்லை, ராக்கெட் என்று. விக்ரம் படம் ஒரு ராக்கெட்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *