777 சார்லி பட விமர்சனம்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும் கன்னட சினிமாவில் இருந்து ஒரு தரம் மிகுந்த படைப்பாக இதோ இந்த ‘777 சார்லி.’ இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி இருக்கிறார்.
கதைக்கு வருவோம். சிறுவதிலேயே அம்மா, அப்பா, தங்கை ஆகியோரை கார் விபத்தில் இழந்து தனி மரமாகும் சிறுவன் தர்மா வளர்ந்து வாலிபனாகி ஒரு தொழிற்சாலை பணியில் இருக்கிறான். அங்கும் யாரிடமும் ஒட்டாத அவன், வீடு வந்தால் மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வான். எதற்காகவாவது கோபம் வந்தால் மட்டும் அவனிடம் உள்ளூர இருக்கும் மிருகம் வேலை செய்யும். இதனால் சக காலனிவாசிகள் பாதிபேருக்கு அவனென்றால் பயம். மீதி பேருக்கு வெறுப்பு. அவன் பைக்கில் வீடு வரும்போது அம்மாவிடம் சாப்பிடும் குழந்தை கூட பயத்தில் வாய் மூடி அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்து கொள்கிறது என்றால், அவன் கோபம் வந்தால் எத்தனை மூர்க்கம் நறைந்தது என்பதை உணர முடியும்.
இப்படி கரடு முரடான தர்மாவிடம், விரைவாக வளர்வதற்காக ஊசி போடப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் லாப்ரடார் நாய் ஒன்று தப்பி வந்து தஞ்சம் அடைந்து அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அவனுக்குள் இருக்கும் பாச மனிதனை வெளிக்கொணருகிறது, அந்த நாயை தன்னை நேசிக்கவென்றே அவதாரம் எடுத்து வந்த இன்னொரு உயிராக கொண்டாடுகிறான், தர்மா.
இந்நிலையில் ஊசி போடப்பட்டதால் அந்த நாய்க்கு கேன்சர் வந்திருப்பதை மருத்துவர் மூலம் அறியும் நாயகன், அதன் வாழ்நாள் இன்னும் கொஞ்சமே என்ற அதிர்ச்சியையும் தெரிந்து கலங்குபவன், அந்த நாய்க்கு பனிமலையைப் பார்க்கும் ஆசை இருப்பதை அறிகிறான். நாயின் நாட்கள் முடிவதற்குள் இமாச்சலப் பிரதேசப் பனிமலையைக் காட்டி விட, நாயோடு பயணப்படுகிறான். நாயின் பனிமலை ஆசையை நிறைவேற்றினானா…தன் உயிராகவே வரித்துக் கொண்ட அந்த நாயை அவனால் காப்பாற்ற முடிந்ததா?
விடை, கண் வழி கடந்து நெஞ்சம் வரை கனமாக்கும் கிளைமாக்ஸ்.
படத்தை பொறுத்தவரை நாயகனே நம்ம சார்லி தான். அவள் நடையென்ன…பதுங்கல் என்ன…மழையில் அனாதையாக நடுங்கி ஒடுங்குவதென்ன…நாயகனின் அன்பு கிடைத்த பிறகு அவனோடு ஒட்டிக் கொள்வதென்ன… அவனுக்கு ஒன்று என்றதும் ஆம்புலன்சை துரத்தியபடி ஆஸ்பத்திரிக்கே வந்து காத்திருப்பதென்ன… சார்லி…நீயென்ன நடிப்பதற்காகவே அவதரித்த ஜென்மமா…கிளைமாக்சில் தலை தூக்கிப் பார்க்கும் சிறுஅசைவிலும் உன் நடிப்பு நெஞ்சம் வரை எகிறுகிறதே… பந்தயத்தில் நீ பாய்ந்து எட்டிப் பிடிக்கும் உயரம் தான், உன் நடிப்பும்.
நாயகனாக ரக்–ஷித் ரெட்டி கச்சிதம். ‘அந்த இரும்பு இதயத்துக்குள் இலவம் பஞ்சு மனசா’ என்று கேட்கும்அளவுக்கு நாயின் பாசம் மாற்றும் இடங்களில் மனிதர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். பனிச்சிகரத்தை எட்டும் அந்த நீண்ட நெடிய பயணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஓரிரு நாட்கள் தடையாக அமைந்து விட, நாயைத் தூக்கியபடி பனிச்சிகரம் நோக்கி ஓடும் இடத்தில் நிஜமாகவே கண்கள் குளமாகி, விம்முகிறது நெஞ்சம்.
நாயகியாக வரும் சங்கீதா சிருங்கேரி பொருத்தமான தேர்வில் அந்த கேரக்டரை அழகாக்கி இருக்கிறார். முதலில் நாயகனை தவறாகப் புரிந்து கொள்ளும் இடத்திலும் அப்புறமாய் சரியாக புரிந்து கொள்ளும் இடத்திலும் அம்மணி ‘நடிப்புக் கண்மணி.’
கலகல கால்நடை மருத்துவராக ராஜ் பி.ஷெட்டி அக்மார்க் அமர்க்களம். நாய்க்கு தேங்க்ஸ் சொல்ல கற்றுக் கொடுக்கும் அட்ரிகா (ஷர்வரி நடித்தார்) நன்கு எழுதப்பட்ட பாத்திரத்தைப் பெறுகிறார்.
வந்தது கொஞ்சமே என்றாலும், தன் சோகக்கதையை நாயகனிடம் சிரித்தபடி பகிர்ந்து கொள்ளும் இடத்தில் பாபி சிம்ஹா சிறப்பு. அந்த வயதான ஒட்டல் தம்பதிகளின் தர்மா மீதான பாசமும் அக்கறையும் வேற லெவல்.
பத்தடிக்குப் பத்தடி அறை, பனி மலையின் விஸ்தீரணம், பயணக்காட்சி எதுவானாலும் அரவிந்த் காஷ்யபின் ஒளிப்பதிவு ஜாலம் புரிகிறது. காஷ்மீர் நோக்கிய பயணத்திடையே வரும் பாடல் காட்சிகளின் ஸ்வரங்கள் அனைத்தும் இசையமைத்த நோபின் பாலுக்கு அமைந்த வரம். ஒரு நாயின் உணர்வை தாயின்உணர்வாக உணர வைத்த விதத்தில் கொண்டாடத்தோன்றுகிறது, இயக்கிய கிரண்ராஜை.
சார்லி, விருதுக்குரியவன்.