சினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்

விக்ரம் பட விமர்சனம்

தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதில் கமல் மகன் காளிதாசும் அடக்கம். அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை தன்னிச்சையாக செயல்படும் ஏஜெண்ட் பகத் பாசில் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவர். . கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளை செய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார்? என்பது எதிர்பார்ப்பும் பரபரப்பும் இணைந்த கதைக்களம்.

தொடக்கம் முதல் முடிவு வரை வேகம், வேகம் வேகம்.

மகனை பறி கொடுத்த தந்தை அதற்காக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வார் அல்லவா. அதுவும் முன்னள் போலீஸ்.அதிகாரி தந்தை என்னும் பட்சத்தில் சும்மாஇருப்பாரா?.அதற்காக அவரையும் குறி வைக்கிறது போதைக்கும்பல். ஒரு கட்டத்தில் அவரை பாம் வைத்து காலி செய்கிறது. இதன் பின்னர் மேலும் வெறியோடு கோடிக்கணக்கில் மதிப்புள்ள போதைப்பொருளை தேடி அலைகிறது.

இப்போது திடீர் திருப்பமாக போதைக்கும்பலை முகமூடி அணிந்து காலி செய்யப் புறப்படுகிறார் அதிரடி ஆசான் ஒருவர். அவர் யாரென்று பார்த்தால் எதிரிகளால் கொல்லப்பட்ட கமல் தான். அவர் எப்படி உயிரோடு வந்தார்? மகனை கொன்ற கும்பலை களையெடுத்தாரா என்பது ஆக்ஷன் அதிரடி கிளைமாக்ஸ்.

முன்னாள் காவல்துறை அதிகாரியாக கமல் ஆச்சரியம் பிளஸ் அட்டகாசம். தன் தோற்றத்திலோ, வயதிலோ எந்த பாசாங்கும் வைத்துக்கொள்ளாமல் வருகிறார். இந்த வயதிலும் நடனமாடுகிறார். பொறி பறக்க சண்டை போடுகிறார்.மகனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பதற்காக அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று பார்த்தால் அதற்கு அவர் தரும் சமுதாய நலன் சார்ந்த விளக்கம் திரைக்கதையின் பலமும் கூட.. பேரக் குழந்தையை வில்லன்கள் கொல்லக்கூடும் என்று பகத் பாசில் தகவல் கொடுத்து அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்ல, ‘எனக்கு உதவி செய்யறீங்கன்னு தெரிஞ்சா நீங்க தான் எச்சரிக்கையா இருக்கணும்…’ என்று பதிலுக்கு சொல்வதை இன்றைய அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ள முடிகிறது. பேரக்குழந்தைக்கும் இவருக்குமான அந்த அன்யோன்யம் மகிழ்வும் நெகிழ்வுமானவை.படத்தில் கமலை அடுத்து நம்மை கவர்வது பகத் பாசில் தான். தனது டீமுடன் துப்பறியத் தொடங்குவதில் இருந்து துரோகம் செய்த மேலதிகாரியை போட்டுத் தள்ளுவது வரை இவர் எங்கும் நடித்ததாக தெரியவில்லை. கேரக்டராகவே வாழ்ந்திருக்கார் மனுஷன். இவருக்கும் காயத்ரிக்குமான அந்த காதல் எபிசோட் திரையில் இதுவரை சொல்லப்பட்டிராத புதுமை. மனைவியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற சாலையில் அவர் ஓடும் வேகம் இப்போது வரை நெஞ்சுக்குள் தடதடக்கிறது.
கடத்தல் கும்பலின் தலைவனாக கொடூரமான வேடம் விஜய்சேதுபதிக்கு. அறிமுக காட்சியிலேயே நெஞ்சில் பயம் கூட்டி விடுகிறார். போதை மருந்து எடுத்துக் கொண்டு அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்குகிறத. அதையே கமலுடனான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் பிரதிபலிப்பது ரசனை.
சிறிய வேடம் என்றாலும் பகத் பாசிலின் மனைவியாக காயத்ரி கச்சிதம். விசவாச டிரைவராக குமரவேல், கமலின் ஆப்த நண்பராக சந்தானபாரதி, கமல் வீடடு பணிப்பெண், அந்த சுட்டிக்குழந்தை உள்ளிட்ட அத்தனை பேரும் பாத்திரச் சிறப்பில் பிரகாசிக்கிறார்கள். ஒரு காட்சி என்றாலும் சூர்யா ‘பார்யா’ என்று ரசிக்க வைக்கிறார்.
அனிருத் இசையில் சண்டைக்காட்சிகளில் இடி முழங்குகிறது. அடி ஒவ்வொன்றும் இடியாக ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். கிரிஸ் கங்காதரனின் கேமரா இரவுக் காட்சிகளை துப்பாக்கி தோட்டா சகிதம் காட்சிப்படுத்தி மிரள வைக்கிறது. போதை மருந்து கதையை அதிரடி மசாலா தூவி முடிவு வரை பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்ட விதத்தில் இம்முறையும் வெற்றித்தளத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *