கே.ஜி.எப்-2 பட விமர்சனம்

மும்பையில் ரவுடியாக இருந்த ராக்கி பாய், பெங்களூருவில் உள்ள தங்கச்சுரங்கத்தை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுடன் கே.ஜி.எப். முதல் பாகம் முடிவடைந்திருந்தது, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் பிரகாஷ்ராஜ் கதை சொல்லலில் இருந்து தொடங்குகிறது. கேஜிஎப்-ஐ கைப்பற்றிய நாயகன் அதை முழுவதுமாய் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இதனால் அதை அடைய நினைத்த மற்ற ரவுடிகளுக்கும், நீண்ட நாட்களாக இதனை அடைய துடிக்கும் சஞ்சய் தத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் போர் தான் கேஜிஎஃப்-2. உலகின் ஒட்டுமொத்த தங்கத்தையும் கொண்டு வருவேன் என்ற அந்தச் சிறுவனின் சத்தியம் என்ன ஆனது என்பதையும் பிரமாண்டமாய் சொல்லியிருக்கிறது இந்த இரண்டாம் பாகம்.
இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தை மனதில் வைத்துத்தான், முதல் பாகத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டு வேலை செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
முதல் பாகத்தில் கதை சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்ட இயக்குனர் இரண்டாம் பாகத்தில் ஆரம்பத்திலேயே கதையை தொடங்கி விடுகிறார். முடியும்வரை வேகம் வேகம் வேகம்.
முதல் பாகத்தில் மெயின் வில்லன் கருடனை சுட்டு தள்ளுவதற்கான வாய்ப்பு முன்கூட்டியே கிடைத்தும் அமைதி காத்து க்ளைமாக்ஸில் கருடனை வெட்டி வீசி ’கே.ஜி.எஃப்.’ சாம்ராஜ்யத்தை தன்வசமாக்கி இருப்பார் ராக்கி பாய். இரண்டாம் பாகத்தில் கருடனைக் கொல்ல அனுப்பிய வில்லன் ஒரு பக்கம், கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அதிரா (சஞ்சய்தத்) மீண்டும் கொலைவெறியோடு வருவது இன்னொரு பக்கம், இடையில் இந்திய அரசே யாஷ்ஷை பிடிக்க முனைப்பு காட்டுவது என நீளும் பலமுனை தாக்குதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது அதிரிபுதிரி திரைக்களம்.
ராக்கிபாயாக யாஷ் அந்த கேரக்டருக்கு கம்பீரம் சேர்க்கிறார். எதிரிகளை நிதானமாக களத்தில் அவர் எதிர்கொள்ளும் அத்தனை இடங்களும் துடிப்பும் துள்ளலுமான உலைக்களம்.
முதல் பாகத்திலேயே யஷ்ஷை ‘என்னோட ராக்கி’ என்று உரிமை கொண்டாடும் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இதில், ‘உர்ர்ர்’ என்று ஆரம்பத்தில் முரண்டு பிடிப்பது முரண். இருந்தாலும் காதலான பிறகு அம்மணியின் நடிப்புக்கொடி உயரப்பறக்கிறது.
வில்லன்களில் சஞ்சய் தத், முதல் இடத்தில் இருக்கிறார். மேக்கப் உபயத்தில் பார்வையிலேயே பயமுறுத்துகிறார். பிரதமராக வரும் ரவீணா தாண்டன் பொருத்தமான தேர்வு. அம்மாவாக ஈஸ்வரிராவ் பாந்தம்.
ஒளிப்பதிவும் இசையும் படத்தின் இரு கண்கள். அன்பறிவின் சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றும் நெஞ்சில் இடியாய் இறங்குகிறது. எழுதி இயக்கிய பிரசாந்த் நீல், எடுத்துக்கொண்ட கதையை அதிரடி தடாலடி, அம்மா சென்டிமென்ட் என்று காட்சிப்படுத்திய விதத்தில் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.
