பீஸ்ட் படவிமர்சனம்
தீவிரவாதி ஒருவனை வேட்டையாடப்போகும் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி வீரராகவன், தனது கவனக்குறைவால் சிறுமி ஒருத்தியின் மரணத்துக்கு காரணமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வேலையை விடுகிறார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் புதிய கம்பெனி பிரச்சினை தொடர்பாக, வணிக வளாகம் ஒன்றுக்கு செல்லும்போது அந்த வணிக வளாகத்தை ‘ஹைஜாக்’ செய்கிறார்கள், தீவிரவாதிகள்.
அரசாங்கம் ஒருபக்கம் தீவிரவாதிகளுடன் பேசிக்கொண்டிருக்க, தீவிரவாதிகளோ வீரராகவனால் தற்போது சிறையில் இருக்கும் தங்கள் தலைவனை விடுதலை செய்ய டிமாண்ட் வைக்கிறார்கள். அரசும் வேறுவழியின்றி தீவிரவாதிகள் தலைவனை விடுதலை செய்கிறது. இதற்கிடையே அந்த வளாகத்துக்குள் இருக்கும் வீரராகவன் தீவிரவாதிகளை தனக்கே உரித்தான அதிரடி பாணியில் வேட்டையாடத் தொடங்குகிறார். தீவிரவாதிகளை மடக்கி வணிக வளாகத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றினாரா? விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் தலைவனை என்ன செய்தார் என்பது அதிரிபுதிரி திரைக்கதை.
வீரராகவனாக விஜய். வழக்கமான அதிரடிக் காட்சிகளில் அதே வேகம். நடனத்தில் அசுர வேகம். பூஜா ஹெக்டேயை காதலில் கையாளும் உத்வேகம் என எல்லாவற்றிலும் ரசனை நம்பர் ஒன். தீவிரவாத தலைவனை வேட்டையாட கிளம்பும் இடத்தில் ‘ஜெட்’டை விடவும் வேகம்.
நாயகியாக பூஜா ஹெக்டே அறிமுகமாகும் அந்த முதல் காட்சியிலேயே கவர்ந்து விடுகிறார். நடிப்புக்கான வாய்ப்பு அதிகம் இல்லையெனினும் அதை நடனத்தில் ஈடுகட்டி விடுகிறார்.
கை கட்டப்பட்ட விஜய்க்கு உதவும் காட்சியில் அபர்ணா தாசின் முகபாவனைகள் அத்தனை அழகு.
காமெடிக்கு யோகிபாபு, கிங்ஸ்லி இருந்தாலும் சிரிக்க வைப்பதெல்லாம் வி.டி.வி.கணேஷ் தான். மனிதர் வாயைத் திறந்தாலே தியேட்டர் வெடித்து சிர்க்கிறது.
மத்திய மந்திரி ஷாஜியை அவ்வப்போது கலாய்க்கும் கேரக்டரில் டைரக்டர் செல்வராகவன். இனி நடிகர் செல்வராகவனும்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்டண்ட் காட்சிகள். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார், அனிருத். மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கிளைமாக்ஸ் விமான பாய்ச்சல்களை கண்களுக்கு நெருக்கமாக்கி விடுகிறது.
முதல்பாதியில் வேகம் பிடிக்கும் திரைக்கதை, மறுபாதியில் வேகத்தடை சாலையில் பயணிக்கும் வாகனம் போல் தடுமாறுகிறது. ஒருவழியாக கிளைமாக்சில் இழுத்துப் பிடித்து சரி செய்கிறார், இயக்குனர் நெல்சன். இருப்பினும் விஜய் என்ற மேஜிக்கால் ‘டேஸ்ட்’டாக மாறி விடுகிறது, இந்த பீஸ்ட்.