Latest:
சினிமா செய்திகள்திரை விமர்சனம்

மன்மத லீலை திரை விமர்சனம்

2010-ல் ‘ஆர்குட்’ மூலம் தனக்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவை நேரில் சந்திக்க விரும்புகிறார், அசோக் செல்வன். சம்யுக்தாவும் அவரது விருப்பத்துக்கு ஓ.கே. சொல்ல… அவரது வீடு தேடி வருகிறார். மது போதையில் இருவரும் தவறு செய்து விடுகிறார்கள். விடியும் நேரத்தில் சம்யுக்தாவின் அப்பா வந்து விட… சிக்கல் நம்பர் ஒன்று.
2020-ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன். ஒரு நாள் ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் சென்ற நேரம் தற்செயலாக வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் இணைந்து மீண்டும் அதே தவறை செய்து விடுகிறார். சிக்கல் நம்பர் இரண்டு.

2010-ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020-ல் தன் வீட்டில் இருந்து மனைவிக்கு தெரியாமல் ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதே இந்த மன்மத லீலை.

நாயகன் அசோக் செல்வன் முதல் பாதியில் ரொமான்ஸ் திலகமாகி இருக்கிறார். மறுபாதியில் காமெடியிலும் பிரகாசிக்கிறார். நாயகிகளாக வரும் சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இயல்பான நடிப்பில் ஸ்மிருதி வெங்கட் கவர்கிறார். பிரேம்ஜியின் இசையும் தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் படத்தின் கூடுதல் பலம்.
மன்மத லீலை என்று பெயர் வைத்திருந்தாலும், எல்லை தாண்டாத இயக்கத்தில் வெங்கட்பிரபு நிமிர்ந்து நிற்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், இந்த கதையை கையாண்டதற்காகவே அவருக்கு பொக்கே கொடுத்து பாராட்டலாம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் அதிகம்.