கூர்மன் பட விமர்சனம்

போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜாஜி, ஒருவர் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லும் ஆற்றல் கொண்டவர்.
இவரின் திறமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜியை அனுப்புகிறார், ஆடுகளம் நரேன். அந்தக் குற்றவாளி ராஜாஜியிடம் இருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு கட்டளையிடுகிறார்.
இந்த விஷயத்தில் உண்மையான குற்றவாளி பிரபல வக்கீல் மகன் தான் என்பதை கண்டுபிடிக்கும் ராஜாஜி, அவனை தேடிப்பிடித்து அவன் மூலம் உண்மையை வாக்குமூலமாக வீடியோ பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வக்கீல் தனது அடியாட்கள் மூலம் ராஜாஜியை கொல்ல முயல…
ராஜாஜி உயிர் தப்பினாரா? போலீஸ் வேலையில் இருந்து ராஜாஜி சஸ்பெண்ட் செய்யப்பட என்ன காரணம்? என்பது பரபர திரைக்கதை.
நாயகன் ராஜாஜி, கோபம், காதல், பாசம், ஆக்ரோஷம் என நடிப்பில் கவர்கிறார். இரண்டாவது நாயகனாக வரும் பிரவீன் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்
நாயகியாக வரும் ஜனனி, தனது கேரக்டரில் பளிச்சிடுகிறார். பால சரவணன், ஆடுகளம் நரேன் பொருத்தமான கேரக்டர் தேர்வில் பிரகாசிக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு படத்தை இயக்கி இருக்கும் பிரயான் பி ஜார்ஜ்., கதை சொல்லலில் கவர்கிறார். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். படத்தில் இடம் பெறும் பண்ணை வீடும் அதன் சுற்றியிருக்கும் இடங்களும் சக்தி அரவிந்த்தின் கேமராவில் அழகு. திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.
