பன்றிக்கு நன்றி சொல்லி பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் பாலா அரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ சோனி லிவ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் நல்ல கதையோடு தயாரிப்பாளர்களை சந்திக்கிறார், நாயகன். இவரிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் ஒருவர், கதை படித்து அந்தகதையை தனக்கு விலைக்கு தரும்படிகேட்கிறார். இளைஞனோ, ‘நானே இயக்கும் எண்ணத்தில் தான் கதை சொன்னேன். அதனால் கதையை தர இயலாது என்றபடி நகர்கிறான். அடுத்த தயாரிப்பாளரை தேடி அவன் பயணம் தொடர…
இதற்கிடையே 1000 ஆண்டுகள் பழமையான பல கோடி மதிப்பு கொண்ட பஞ்சலோக பன்றி வடிவ சிலையை ஒரு ரவுடி கும்பல் தேடியலைகிறது. போலீஸ்காரர் ஒருவரும் இ்ந்த சிலை தேடுதல் பட்டியலில் இருக்கிறார். சிலை கிடைத்தால் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம் என்று வெறியுடன் தேடித் திரியும் அந்த கும்பலிடம் எதிர்பாராமல் சிக்குகிறான், நமது சினிமா கனவில் மிதக்கும் நமது நாயகன், எதிர்பாராமல் இந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறான். சிலை கிடைத்ததா? நாயகன் அவர்களிடம் இருந்து மீண்டானா…என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நிஷாந்த், வில்லனாக விஜய்சத்யா பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். மற்றவர்களில் செல்லா, பாலாஜி ரத்தினம் கவனிக்க வைக்கிறார்கள்.
சிலை கடத்தல் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பாலா அரன், படம் முழுவதும் சில பிளாஷ்பேக்குகளை வைத்து எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜின் கேமரா, கடத்தல் காட்சிகளில் நம்மையும் சம்பவ இடத்துக்கு கடத்திப் போய் விடுகிறது. சுரேன் விகாஷின் இசையில் பின்னணி இசை முன்னணி பெறுகிறது.
