மருத பட விமர்சனம்

மதுரை மாநகரை ‘மருத’ என்றும் அழைப்பதுண்டு. அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது படம்.
சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு அண்ணன் சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தாரால் செய்முறை செய்ய முடியாமல் போகிறது.. இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கி விடுகிறார்.
அதற்குப் பிறகும் ஆத்திரம் தீராத விஜி சந்திரசேகர், செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட மகளுக்கு திருமண எற்பாடு செய்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த காதல் தெரிய வரும் விஜி, மகளை வீட்டோடு சிறைப்படுத்துகிறார். கல்யாண வேலையில் தீவிரம் காட்டுகிறார்.
விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? காதல் ஜோடிகளின் காதல் கரை சேர்ந்ததா? என்பது மண்வாசம் மாறாத கதைக்களம்.
நாயகனின் அம்மாவாக ராதிகா படம் முழுக்க நடிப்பால் வியாபிக்கிறார். உருப்படாத மகனை பெற்று விட்டோமோ என்று கண்களில் அவர் தேக்கி வைத்திருக்கும் சோகம் நமக்குள்ளும் கடக்கிறது. செய்முறை பணத்தை அண்ணன் கையில் திணித்து விட்டுப்போகும் இடத்தில் ‘ஒண்ணுமே சொல்லாம போறிய தாயி’ என்று அண்ணன் கேட்க, ‘என்னத்தை சொல்றதுண்ணே’ என்று கேட்டு அண்ணன் குடும்பத்தால் தனக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிடும் இடத்தில் நம் கண்களும் குளமாகி விடுகிறது. வில்லி கேரக்டரில் மிரட்டியிருக்கிறார், விஜி சந்திரசேகர். ராதிகாவை நடுரோட்டில் உட்காரவைத்து சோறுபோட்டு அவமானப்படுத்தும் இடத்தில் அந்த கெக்கலிப்பும் கொந்தளிப்பும் அவரை வில்லாதி வில்லியாக்கி விடுகிறது.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சரவணன். மாரிமுத்து ரோஷக்கார அப்பாவாக செத்து நடிப்பில் வாழ்ந்து காட்டுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லவ்லினுக்கு அந்த அரிய பெரிய கண்களே போதும். லேசாக உருட்டினாலே நடிப்பு வந்து விடுகிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை கண் முன் கொண்டு வருகிறது.
படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறை ஏற்படுத்தும் விபரீதத்தை திரைப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். இயல்பான நடிப்பிலும் ஈர்க்கிறார்.
மருத, மண் மணம்.
