இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பின் சிறையில் பல வருடம் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும் முன்னாள் போராளி அரவிந்தன் சிவஞானம், தனது ஊருக்கு வருகிறார். அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை ராணுவம் அபகரித்துக் கொண்டது தெரிய வர, அதிர்ந்து போனவர், நிர்க்கதியாக விட்டுச் சென்ற தனது மனைவியை தேடி அலைகிறார். அவரது முன்னாள் போராளி நண்பர்கள் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடிக்கும் அரவிந்தன், அந்த மகிழ்ச்சி வாழ்க்கை நீடிக்காமல் ஒரு இளம்பெண் கடத்தல் வழக்கில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறார். தனக்கு சம்பந்தமே இ்ல்லாத அந்த வழக்கில் இருந்து அவர் தப்பித்தாரா, இல்லையா? என்பது நெஞ்சுக்கு நெருக்கமான திரைக்கதை.
நாயகன் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பத்தில் தனது குடும்பத்தை தேடி அலைவது, மனைவி, மகள் கிடைத்தவுடன் அவர்களுடனான மகிழ்ச்சி வாழ்க்கை என்று ஒரு சாமானியனின் வாழ்க்கைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். பிற்பகுதியில் இளம்பெண் கடத்தில் வழக்கில் தனக்கும் வலை விரிக்கப்படுவது தெரிந்து அதிரும் இடத்திலும், கடத்தல்காரர்களை கண்டு பிடிக்க போராளி குணத்தை வெளிக்காட்டும் அதிரடியிலும் அந்த கேரக்டருக்கே கம்பீரம் சேர்க்கிறார்.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, எதிர்பாராமல் கணவனை கண்ட ஆனந்தத்தில் கலங்கும் இடத்தில் தேர்ந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்துகிறார். 8 வருடங்களுக்கு பிறகு கணவரை எதிரபாராமல் சந்திக்க நேரும் இடத்தில் இவரது நடிப்பு உணர்ச்சியும் வலியும் நிறைந்தவை.

போராளி யாழினி வேடத்தில் வரும் லீலாவதி, நோயின் இறுதிக்கட்டத்தில் பிள்ளைகளை பிரிய மனதின்றி நடத்தும் ஜீவமரணப் போராட்டத்தின்போது கண்கள் கலங்கும். இதயம் துயரத்தில் குலுங்கும்.

பிரேம், தீபச் செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக தனஞ்செயன், பாலா என்ன நடித்த அத்தனை பேரும் தங்கள் பாத்திரங்களில் கதை மாந்தர்களாகவே உலா வருகிறார்கள். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மிச்சம் மீதியிருக்கும் இலங்கையின் எழிலை நம் கண்களில் நிறைக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் இனிமை. வரிகள் ‘வலி’மை.

தீபச்செல்வனின் வசனமும் பாடல்களும் ஈழ மக்களின் வலிகளை மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது. சாதாரணமாக கடந்து போகும் சிறு வசனங்கள் கூட அவர்களை சுற்றி நடக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது. ஈழத் தமிழர்களின் தற்போதைய வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் யதார்த்்தமாய் காட்சிப்படுத்திய விதத்துக்காகவே இயக்கனர் ரஞ்சித் ஜோசப்புக்கு மலர்க்கொத்து. மனம் கொத்திய வேதனையை அருகிருந்து பார்த்ததுபோல் உணர வைத்த இயக்கத்துக்காக இந்த படைப்பாளியை உச்சி முகர்ந்து கொண்டாடலாம்.