சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பட விமர்சனம்

திரை விமர்சனம்

வானொலியில் ஆர்ஜே-வாக பணியாற்றி வரும் சுபிக்–ஷா, ஒரு புராஜக்ட்டுக்காக சவுண்டு ரெக்கார்டிங்கில் கோல்ட் மெடலிஸ்ட்டான ருத்ராவை தேடிச் செல்கிறார். புராஜக்ட் வெற்றிகரமாக முடிய, பாராட்டுக்க்கள் குவிகிறது சுபிக்–ஷாவுக்கு. உண்மையில் இந்த பெருமைக்குரியவன் ருத்ரா தான். ஆனால் புகழோ சுபிக்–ஷாவுக்கு போய்ச் சேருகிறது. இதனால் அடுத்தடுத்த இது தொடர்பான தனது பணிகளில் ருத்ராவை பயன்படுத்திக் கொள்பவள், தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்பதை மட்டும் மறைத்து விட…

அடுத்தடுத்த சந்திப்புக்களில் ருத்ரா சுபிக்–ஷா மீது காதலாக… அந்த காதல் என்னாகிறது என்பது எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ்.
அறிமுக நாயகன் ருத்ரா, வெகுளித்தனமான கிராமத்து இளைஞராக கவர்கிறார். தனது காதலி மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை பார்த்து வேதனைப்படும் காட்சிகளில் காதல் உணர்வுகளையும், கிராமத்து இளைஞர்களின் மனநிலையையும் அழகாக முகத்தில் கொண்டு வருகிறார்.
நாயகி சுபிக்‌ஷாவுக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமலும், தனது லட்சியத்தில் வெற்றி பெறும் முயற்சியை தனது காதலனுக்கு புரிய வைக்க முடியாமலும் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

‘ராட்சசன்’ வினோத் சாகர் காமெடி நடிகராக கவனம் ஈர்க்கிறார். ‘அம்மணி’ சுப்புலக்‌ஷ்மி பாட்டி, அமெரிக்க மாப்பிள்ளை, ருத்ராவின் அப்பா என பாத்திரங்களுக்கேற்ற தேர்வு கச்சிதம்.
ராஜேஷ் அப்புக்குட்டனின் இசையில் பாடல்கள் ரசனை மயம். குறிப்பாக ‘விழியினாலே…’ பாடல் நெஞ்சுக்குள்ளே.
பிஜு விஸ்வநாதன் கேமரா இயற்கையின் காதலனாகி இருக்கிறது. இவர் கேமரா சிறைப்பிடித்த காட்சிகள் திரையில் அத்தனை குளுமை.
காதல் கதையோடு காதலர்களுக்கு நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லி கவனம் ஈர்க்கிறார், படத்தை இயக்கிய மகேஷ் பத்மநாபன்.

இந்த சர்க்கரை எவ்வளவு இனித்தாலும் திகட்டாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *