சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ஜவான் படவிமர்சனம்

நேர்மையான ராணுவ அதிகாரி ஷாருக்கான் எதிரியின் சதியால் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு, அதே எதிரியிடம் துப்பாக்கி குண்டுகளை வாங்கி கடலுக்குள் மூழ்குகிறார். அவரின் மனைவி தீபிகா படுகோனே தன் கணவரைக் கொல்ல வந்தவனை கொன்று விட்டு, ஜெயிலுக்கு செல்ல, அங்கு அவருக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அப்பாவின் அருமை பெருமை சொல்லி, அவன் வளர்ந்து பெரியவனானதும் அப்பா தேசத்துரோகி இல்லை என நிரூபிக்க வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறக்கிறார், அம்மா.

மகன் வளர்ந்து அம்மாவின் சத்தியத்தைக் காப்பாற்றுகிறானா? அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சமூக பிரச்சினைகளுடன் இணைத்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், அட்லி.
காயங்களுடன் கடலில் இருந்து அப்பா ஷாருக்கான் மீட்கப்பட்டு குணமானதும் அவர் கேட்கும் கேள்வி ‘நான் யார்? என்பது தான்.
கடலில் விழுந்தபோது பாறையில் தலை மோதியதில் பழசை மறந்து போகும் ஷாருக்கான், தன் மகனை சந்தித்தாரா? அவனை மகன் என்று கண்டு கொண்டாரா? என்பதையும் சுவாரசியத்துக்கு குறைவின்றி சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு மாஸ் ஹீரோ என்னவெல்லாம் திரையில் செய்ய வேண்டுமோ அதை திறம்படச் செய்து மாஸ் காட்டியிருக்கிறார் ஷாருக்கான். அதுவும் அப்பா-மகன் என இரண்டு வேடங்களிலும் அதகளப்படுத்தி இருக்கிறார்.

மகனை முதன்முதலாக சந்திக்கும் இடத்தில் அப்பா ஷாருக்கானின் ரியாக்–ஷன் தனி ரகம். அப்பா ஜோடியாக தீபிகா படுகோனும் மகன் ஜோடியாக நயன்தாராவும் அனுபவ நடிப்பால் ஆகர்ஷிக்கிறார்கள். சாந்தமான மனைவியாக வந்து கணவரை தேசத்துரோகியாக்க முயலும் அதிகாரியை ஆவேசமாய் சுட்டுத்தள்ளும் இடத்தில் தீபிகா நடிப்பில் பறக்கிறது, தீப்பொறி. ஜெயிலில் தன் குட்டி மகனிடம் அவர் விடைபெறும் காட்சியில் கண்களில் அருவி.

மகன் ஷாருக்கின் மனைவியாக நயன்தாரா. தன் கணவர் இன்னாரென்று தெரிய வந்ததும் அவரிடம் வெளிப்படும் அந்த அதிரடி ரியாக்–ஷன் நயனுக்கே உரித்தானது.
நயனின் குட்டி மகளாக வரும் அந்த குட்டிப் பாப்பா, ஷாருக்கானை தன் அப்பாவாக தேர்வு செய்யும் இடம் கவிதை. ஷாருக் கூட்டணியில் பிரியாமணி நடிப்பில் முன்னிற்கிறார். கொஞ்ச நேரமே என்றாலும் யோகிபாபு சிரிக்க வைக்கிறார்.
விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டுகிறார். ஷாருக்கானுடனான சந்திப்பில் அவர் காட்டும் புதுப்புது மேனரிச நடிப்பில் ஈர்ப்பு அதிகம்.
கிளைமாக்சுக்கு முன்னதாக வந்தாலும் சஞ்சய்தத் தனது கேரக்டரை ஸ்பெஷலாக்கி விடுகிறார்.
அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேறு லெவல்.
40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள், 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு கட்ட முடியாத தொழிலதிபர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்வது ஏன்? என்ற கேள்வியோடு அடுத்தடுத்த காட்சிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு தொடர் சாட்டை சுழற்றிய விதத்தில் வேகமும் விவேகமும் தெரிகிறது. அப்பா-மகன் கதையை அரசியல், சமூக பிரச்சினை களத்தில் இணைத்த விதத்தில் அட்லி, இம்முறையும் செஞ்சுரி அடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *