சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ராக்கி பட விமர்சனம்

இலங்கைப் போரில் உயிர் பிழைத்து தமிழ்நாட்டுக்கு வருகிறது ராக்கியின் குடும்பம். இங்கே கேங்க்ஸ்டரான மணிமாறனிடம் அடியாளாக சேர்ந்து ரவுடித் தனங்கள் செய்கிறார் ராக்கியின் தந்தை. அவர் இறந்த பின்பு மகன் ராக்கி அதே அடியாள் பணியை தொடர்கிறார். இதற்கிடையே மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையால் மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மாவை கொல்ல, பதிலுக்கு ராக்கி மணிமாறனின் மகனைக் கொடூரமாக கொல்கிறான்.

17 ஆண்டு ஜெயில் வாசத்துக்குப் பிறகு விடுதலையாகி வரும் ராக்கி, தன் ஒரே தங்கை அமுதாவை தேடி அலைகிறார். நண்பர் ஒருவர் உதவியுடன் தங்கையை கண்டுபிடித்த நேரத்தில் அவர் கண் முன்னே மணிமாறனின் ஆட்கள் அமுதாவை தீர்த்துக் கட்டுகிறார்கள். இதனால் மணிமாறனுக்கும் ராக்கிக்குமான பகை இன்னும் நீள்கிறது. ராக்கியின் தங்கை மகளை கடத்தி கொல்ல மணிமாறன் திட்டம் தீட்ட, தங்கை மகளுடன் தனது நாட்டுக்கே திரும்பிப் போக முடிவெடுக்கிறார், ஆனால் இதை தெரிந்த கொண்ட மணிமாறனின் ஆட்கள் தங்கை மகளுடன் ராக்கிக்கும் சேர்த்து முடிவு கட்ட ஆயுதம் தூக்க…

முடிவு ரத்தம் தெறிக்கும் கிளைமாக்ஸ்.

ராக்கியாக வசந்த் ரவி. நடிப்பில் தரமணியை விட இன்னும் முன்னேறித் தெரிகிறார். வசனம் அதிகமில்லை. ஆனால் பேசாத வார்த்தைகளில் வன்மம் தெரிகிறது. வன்முறைக் காட்சிகளுக்கு நேர்ந்து விட்டது போல் அந்த ஆஜானுபாகுவான தோற்றம் கேரக்டரை மனதுக்குள் ஏற்றி விடுகிறது.

மணிமாறனாக பாரதிராஜா. வில்லன் கேரக்டர் என்றாலும் படத்தில் இவர் இன்னொரு ஹீரோ. அடியாட்களை அலட்சியமாக கையாள்வதில் தொடங்கி முடிவு வரை வில்ல ராஜாங்கமே நடத்துகிறார். தனது மகனைக் கண்முன்னே எதிரி குத்திக் குதறுகையில் கதறித் துடிக்கும் இடத்தில் ‘இது தாண்டா நடிப்பு’ சொல்ல வைக்கிறார்.

ராக்கியின் தங்கை கேரக்டரில் ரவீனா கச்சிதம். ஜெயில் வாசம் முடிந்து திரும்பி வந்த அண்ணனை முதலில் புறக்கணிப்பதும், பிறகு தேடிப்போய் நலம் விசாரிப்பதுமாய் நடிப்பில் இந்த சின்னக் குருவி பனங்காய் சுமந்திருக்கிறது. அம்மாவாக கொஞ்ச நேரமே வந்தாலும் ரோகிணி நிறைவு.

ஷ்ரீயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவுல் அந்த கேரிடார்ச ண்டைக்காட்சி உலகத்தரம். தர்புகா சிவாவின் இசை கொலைக்காட்சி வரும்போதெல்லாம் மனதுக்குள் திகில் பரப்புகிறது.

வில்லன்கள் அத்தனை பேரும் பொருத்தமான தேர்வு. ராக்கியின் நண்பனாக ஜெயக்குமார், குடும்ப உறவாக ‘பூ’ ராமு தங்கள் பாத்திரங்களில் நிலைத்து நிற்கிறார்கள்.

வழக்கமான பழிவாங்கல் கதையைக் கையிலெடுத்து அதை எந்தவித சமரசமும் இன்றி புதிய கண்ணோட்டத்தில் தந்த விதத்தில் ‘நம்பிக்கை இயக்குனர்’ வரிசையில் இடம் பிடிக்கிறார் அரண் மாதேஸ்வரன். வரம்பு மீறிய வன்முறைக் காட்சிகள், ரத்தச் சேறான கொலைகள் மட்டும் படம் முடிந்த பிறகும் நம்மை திகிலின் பிடியிலேயே வைத்திருக்கின்றன.

ராக்கி, உள்ளூர்ப் பட வரிசையில் வந்த உலகப் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *