3.33 பட விமர்சனம்

தன் தாய் மற்றும் அக்கா, அக்கா மகளுடன் அந்த புதிய வீட்டுக்குக் குடிவருகிறார் கதிர் (சாண்டி). குடியேறிய முதல் நாளிலிருந்தே அந்த வீட்டில் வித்தியாசமான அதிர்வலை இருப்பதைத் தெரிந்து அதிர்கிறார். தொடர்ந்து சில கெட்ட கனவுகளும் வந்து தன் பங்குக்கு பயமுறுத்தி வைக்க…
அதிகாலை 3:33 மணி அவர் பிறந்த நேரம் என்பதால், அவருக்கு அந்த வீட்டில் சரியாக அதிகாலை 3:33 மணிக்கு இதெல்லாம் நடக்கின்றன. மறுநாள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் வேறு மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆனால் சாண்டியால் மட்டுமே இதை உணர முடிகிறது. இது ஆவி பிரச்சினையா? நாயகனுக்கு நேர்ந்த உளவியல் பிரச்சினையா என்ற கேள்விக்கு விடை, ‘திக் திக்’ திகில் கிளைமாக்ஸ்.
நடன இயக்குநர் சாண்டிக்கு நாயகனாக முதல் படம். சீரியஸான கதாபாத்திரம் என்பதை புரிந்து கொண்டு வழக்கமான தனது சிரிப்பு முகத்தை தூர வைத்து விட்டு நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக வரும் ஸ்ருதி செல்வம் முதலில் அவருக்கு உதவுவதும், பின் உபத்திரம் தருவதுமாய் ஸ்கோர் செய்கிறார்.
நாயகனின் அம்மாவாக ரமா, அக்காவாக ரேஷ்மா இருவரும் கதையின் திருப்புமுனைக்கு உதவுகிறார்கள்.
லோக்கல் மந்திரவாதியாக மைம்கோபியும், ஸ்டைலிஷ் மந்திரவாதியாக கவுதம்மேனனும் ரசிக்க வைக்கிறார்கள். குறிப்பாக எல்லாம் முடிந்த பிறகு கவுதம்மேனன் பேயுடன் பேசி படத்தில் நகைச்சுவை இல்லாத குறையையும் தீர்த்து வைக்கிறார். மனோகரனின் ஒளிப்பதிவும், ஹர்ஷவர்தனின் இசையும் ஒரு திகில் படத்துக்கான மனநிலைக்குப் பார்வையாளர்களைத் தொடக்கத்திலேயே தயார் செய்து விடுவதால் இயக்குனர் ‘நம்பிக்கை சந்துரு’வின் இயக்க வேலை எளிதாகி விடுகிறது.
