சித்திரைச் செவ்வானம் பட விமர்சனம்

பொள்ளாச்சியில் அழகான மனைவி அன்பான குழந்தை என நிறைவாழ்க்கை வாழ்ந்து வந்த சமுத்திரக்கனிக்கு எதிர்பாராத அதிர்ச்சியாய் நிகழ்கிறது, மனைவியின் திடீர் மரணம். தாய் இல்லாத குறை தெரியாமல் மகளை வளர்க்கிறார். சரியான மருத்துவம் கிடைக்காமல் மனைவி இறந்ததுபோல் கிராமத்தில் யாரும் இறக்கக் கூடாது என்று சொல்லி மகளை டாக்டருக்கு படிக்க வைக்க பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுகிறார். ஆனால் சமுத்திரக்கனியின் மகளை சில இளைஞர்கள் ஆபாச படம் எடுத்து அவரது வாழ்வை சீரழிக்கின்றனர். மகளுக்கு நடந்த கொடுமையை கேட்டு கதறும் சமுத்திரக்கனி, மகளை சீரழித்தவர்களுக்கு சரியான தண்டனை தர முடிவு செய்கிறார். இதற்கிடையில் இந்த வழக்கை போலீஸ் கையிலெடுத்து தீவிர விசாரணை மேற்கொள்கிறது. குற்றவாளிகள் யாரிடம் சிக்கினார்கள் என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாத கிளைமாக்ஸ்.
பெண்களுக்கான பாலியல் கொடுமை பற்றி நிறைய படங்கள் வந்தாலும் இந்த படத்தின் பேசுபொருள், பாதித்த குடும்ப பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தான்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவாக கதையின் நாயகனாக வரும் சமுத்திரக்கனி, அந்த கிராமத்து அப்பாவை கண் முன் நிறுத்துகிறார். ராத்திரி பொழுதில் ரத்த விளாரியாய் வந்து கதறும் மகளை சைக்கிளில் தூக்கி வைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி அவர் பயணப்படும் காட்சியில் எந்த தகப்பனும் கண்ணீர் உகுக்காமல் இருந்து விட முடியாது. அடிபட்டு இறந்தது தன் மகளல்ல என்று என்று பெற்ற மகளுக்கே அனாதை முத்திரை குத்தி விட்டு வரும் காட்சியில், கண்களில் தெரியுது அந்த அடங்கவே அடங்காத சமுத்திரம்.
மகளாக பூஜா கண்ணன். தமிழில் இது முதல் படம் என்பது நம்ப கடினம். நடிப்பால் நம் மனதில் மேடை போட்டு விடுகிறார். அப்பாவுக்கும் தனக்குமான அன்யோன்யத்தை சுலபத்தில் ரசிகனுக்குள் இடப்பெயர்ச்சி செய்யும் நடிப்பு இவரை தூக்கிப் பிடிக்கிறது. (நடிகை சாய்பல்லவியின் தங்கை இவர்)
பெண் போலீஸ் அதிகாரியாக ரீமா கல்லீங்கல். காணாமல் போனவர்களை துப்பறியும் இடத்தில் வேட்டைக்கு போன வேங்கையின் வேகம் தெரிகிறது. குற்றவாளிகளை பார்வையாலே மடக்கும் அந்த நடிப்புக்கு ஆரவாரம் நிச்சயம். அந்த மனசாட்சி போலீஸ் ‘ராஜாராணி’ பாண்டியன் சிறப்பு.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா படத்தை இயக்கி உள்ளார். ‘ஸ்டண்ட் மாஸ்டர் ஆச்சே…ஆக்ஷன் படம் தான் தந்திருப்பார்’ என்று பார்த்தால், இவர் தந்திருப்பது தந்தை-மகள் பாசக் கதை. அதீத பாசம் ஒருவரை எந்த எல்லைக்கும் போகவைக்கும் என்கிற பழி வாங்கும் பின்னணியில் இதயம் நெகிழ பாசக்கதை தந்திருப்பதில் முதல் படமே இவரது பெயர் சொல்லும் முத்திரைப் படமாகி விடுகிறது.
மனோஜ் பரமஹாம்சா, கே.ஜி. வெங்கடேஷ் ஆகியோரின் இயல்பு மாறாத ஒளிப்பதிவும், சாம்
சி.எஸ்.சின் இசையும் இ்ந்த பாசப்பூந்தோட்டத்தின் பக்கபல சுவர்கள்.
