அரண்மனையில் சில அமானுஷ்யங்கள் சிறுவர்களுக்கு மட்டும் தெரிய, ‘ஆவியா…அதெல்லாம் சும்மா’ எனக் கடந்து போகிறது ஜமீன் குடும்பம். இந்த பயத்தில் ஜமீன்தாரின் குட்டி மகள் ராசிகண்ணா ஹாஸ்டலில் தங்கி படிப்பை முடித்து விட்டு இளம்பெண்ணாக அரண்மனைக்கு மீண்டும் வரும்போது அதே அமானுஷ்யம், அதே பீதி தொடர.. இந்நேரம் அவருக்கு துணையாக அரண்மனை வீட்டு உறவுக்காரர் சுந்தர்.சி. வர… பேய் ஒன்றல்ல, இரண்டு என்பதும் அதன் டிமாண்ட் என்னவென்பதும் தெரிய வர…, அதை ‘சுந்தர் சி & சாமியார் அண்ட் கோ’வால் கொடுக்க முடிந்ததா என்பதே இந்த அரண்மனை-3′.

இந்த ஆவிக்கதைக்குள் முடிந்தவரை கலகலப்பு ஏற்றி பார்வையாளர்களை கவர்கிற திரைக்கதை, பலம்,
நாயகனாக ஆர்யா. கெஸ்ட் ரோல் மாதிரி வந்து போகிறார். இவருக்கும் ராசிகண்ணாவுக்குமான காதல் திகில் கதைக்குள் ஜில். விவேக், யோகிபாபு, மனோபாலா, நளினி, மைனா நந்தினி ஆகியோரின் காமெடி ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது. ஜமீன்தார் சம்பத், மந்திரவாதி வேல.ராமமூர்த்தி, சாமியார ்மதுசூதுனராவ் கிடைத்த கேரக்டர்களில் ஜொலிக்கிறார்கள்.
சத்யாவின் இசையில் ‘செங்காந்தளே’ மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஆவி அரண்மனையை நடுக்கமாக உணர வைக்கிறது. ஆவி விரட்டும் அந்த மிரட்டல் கிளைமாக்ஸ் காட்சியில் பாட்டும் பரவசமும் ஒருபக்கம், திகிலும் திருப்பமுமாய் இன்னொரு பக்கம் என அந்த பிரமாண்டம், சுந்தர்.சி.க்கே உரியது.