பிரபல கம்பெனி ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வரும் தம்பி ராமையா, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எப்போதுமே சிடுசிடு பார்ட்டி. அவர்அன்பாக இருந்து குடும்பமும் பார்த்ததில்லை. அலுவலகமும் உணர்ந்ததில்லை. இந்நிலையில் அவரது 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராக… அந்த சமயத்தில் அவருக்கு அலுவலகத்தில் அவசர வேலை ஒன்று வருகிறது.

இதற்காக வெளியூர் செல்லும் அவர், வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.

இந்த நேரத்தில் சமுத்திரக்கனி என்ட்ரி. அவர் இறந்துபோன தம்பி ராமையாவிடம் தன்னை டைம் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘நீங்கள் இறந்துவிட்டதால் உங்களின் நேரம் முடிந்துவிட்டது, அதனால் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்’ என்று சொல்ல…
எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள். முடிக்க வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்து விடுகிறேன் என சமுத்திரக்கனியிடம் தம்பி ராமையா வேண்டுகோள் வைக்க… அதை ஏற்று அவருக்கு 90 நாட்கள் அவகாசம் தருகிறார் சமுத்திரக்கனி. அந்த 90 நாட்களில் தம்பி ராமையா எப்படி மாறினார்? என்னவெல்லாம் செய்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.

சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பில் ரசிகனையும் கதைக்குள் இழுத்துக் கொள்கிறார். சமுத்திரக்கனி பேசும் ஒவ்வொரு வசனமும், வாழ்க்கைக்கான புத்தகம்.
சஞ்சிதா ஷெட்டி, தீபக், ஷெர்லினா, சிவரஞ்சனி, ஜெயப்பிரகாஷ் இந்த கதைக்களத்தில் அமைந்த கேரக்டர்களாகவே மாறிப்போயிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது வசனம் தான். ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரக்கனி மூவரின் வசனமும். திரைக்கதையின் பக்கபலம்..
பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.

வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட காலத்துக்குள் மற்றவர்களிடம் நாம் நல்லது பாராட்ட வேண்டும் என்ற கருத்தை கச்சிதமாக திரைப்படுத்திய தற்காகவே இயக்குனர் சமுத்திரக்கனியை கொண்டாடலாம். விருதுக்குரிய படைப்பு.