கடத்தல் திரைப்பட விமர்சனம்

பி என் பி கிரியேஷன்ஸ் , பிரைம் அசோசியேட்ஸ், சவுத் இண்டியன் புரடக்ஷன்ஸ் சார்பில், செங்கோடன் துரைசாமி, நிர்மலா தேவி, எம் ஆர் தாமோதரன் தயாரிப்பில் உருவான படம் ‘கடத்தல்’.
சலங்கை துரை.. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் காத்தவராயன்’, ‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302′ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
எம் ஆர் தாமோதர், விதிஷா, ரியா, சுதா , நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த் , ஆதி வெங்கடாச்சலம், சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரண்டு கிளை கதைகளை இணைத்து ஒரு முடிச்சு போட்டு இருக்கிறார் இயக்குனர்.
தன் நண்பனை தேடி ஓசூர் வருகிறார் நாயகன் எம் ஆர் தாமோதர். அப்போது தங்கள் அருகே ஒரு உணவகத்தில் ஒருவன் ஒரு குழந்தையை கடத்தி வந்தது தெரிகிறது. அவனை அடித்து விட்டு அந்த குழந்தையை எடுத்து வருகிறார்.
ஆனால் அந்த குழந்தை அப்பா அம்மா ஊர் பேர் தெரியாத காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றாலும் இவரை போலீஸ் ஒரு குற்ற செயலுக்கு தேடிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு கதை.. கிராமத்தில் பதநீர் விற்கும் இவர் நண்பர்களுடன் சுற்றி தெரிகிறார். ஆனால் நண்பர்களோ திருட்டு செயல்களில் ஈடுபடுபவர். எனவே நீ இங்கே இருந்தால் கெட்டுப் போய்விடுவாய் என்கிறார் தாய்.
எனவே வேறு வழியின்றி தன் உறவினர் சிங்கம்புலி இருக்கும் இடத்திற்கு செல்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில் இவரது நண்பர்கள் தேடி வர அங்கே ஒரு சம்பவம் நடக்கிறது. சம்பவத்திற்கு காரணம் நாயகன் தான் என நினைக்கும் வில்லன் இவரை கொல்ல திட்டமிட எதிர்பாராத விதமாக வில்லன் தம்பியை போட்டு தள்ளி விடுகிறார் நாயகன்.
தன் கணவனைப் போல் தன் மகன் வாழக்கூடாது என நினைத்த தாய் தன் மகனும் ஒரு கொலைகாரன் என்பதை அறிந்த அடுத்த நிமிடமே அதிர்ச்சியில் மரணம் அடைகிறார்.
இந்த இரண்டு கதைகளையும் இணைத்து இறுதியில் வித்தியாசமான கதைக்களம் அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சலங்கை துரை.
அதன் பிறகு என்ன நடந்தது? தற்பாப்புக்காக கொலை செய்த நாயகன் என்ன ஆனார்? குழந்தை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
முகம் முழுக்க தாடி.. கலைந்த முடி என கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார் எம் ஆர் தாமோதர். ஆக்சன் வரும் அளவுக்கு இவருக்கு சுத்தமாக ரொமான்ஸ் வரவில்லை.. காதலி மாமன் மகள் என இரண்டு நாயகிகள் இருந்தும் காட்சிகளை வீணடித்து விட்டார்.
விதிஷா & ரியா என இரண்டு நாயகிகளும் கிராமத்து பைங்கிளிகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் மாமன் மகள் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார்.
படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார் சிங்கம் புலி.. வெட்டி பந்தா பேசி நான் யார் தெரியுமா? என்றெல்லாம் வீராப்பு காட்டி நடித்து இருக்கிறார்.
இவரது மனைவியாக கம்பம் மீனா நடித்திருக்கிறார். உன் கணவன் கொலை செய்தானா? என விசாரிக்கும் போது என்னை தொடவே அவர் பயப்படுவார் இதில் கொலையா? என்று மீனா பேசும்போது ரசிக்க வைக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தருண் என்ற பையன் நடித்திருக்கிறார். இறுதியில் நம்மை கொஞ்சம் கண்கலங்கும் வைக்கிறான். நன்றாக பேசத் தெரிந்த இவனுக்கு அப்பா அம்மா ஊர் பெயர் தெரியாதா.? இன்னும் சின்ன குழந்தையாக காட்டி இருக்கலாம்.
மதுரை முத்து என்ற பெயரில் கெத்து காட்டி இருக்கிறார் வில்லன். ஆனால் இவரின் வசனங்களும் உதட்டு அசைவும் ஒட்டவில்லை. பல கலைஞர்களுக்கும் இதே பிரச்சனை தான் எடிட்டர் சரி செய்யவில்லையா.?
நாயகனின் அம்மாவாக சுதா தன்னுடைய அனுபவ நடிப்பை நேர்த்தியாக கையாண்டு உள்ளார்.
சிறப்பு தோற்றத்தில் நிழல்கள் ரவி. ஆனால் இவர் என்ன காரணத்தினாலோ டப்பிங் கொடுக்கவில்லை. இவருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். சுத்தமாக எடுபடவில்லை. நிழல்கள் ரவி போல பேசும் மிமிக்ரி கலைஞரை பயன் படுத்தியிருக்கலாம்.
ஸ்ரீகாந்த் இசையில் ‘பிச்சிப்பூ’ மற்றும் ‘என்ன பெத்த ஆத்தா’ பாடல்கள் தாலாட்டுகிறது. ஆனால் அதற்கான காட்சிகள் தான் சரியாக அமையவில்லை என தோன்றுகிறது.
ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவில் ஓசூர் பொள்ளாச்சி திருநெல்வேலி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. முக்கியமாக ஓசூரில் விநாயகர் சதுர்த்தி நடைபெறும் விழாவில் கேமராவை உள்ளே நுழைய வைத்து காட்சிகளை படமாக்கி இருப்பது சிறப்பு.
தாய் பாசத்திற்கு ஈடு இல்லை.. கூடா நட்பு கேடாய் முடியும் உள்ளிட்ட கருத்துக்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் காட்சியில் விறுவிறுப்பு வைத்து சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.
முதலில் கடத்தல் சம்பவத்தை விறுவிறுப்பாக காட்டிய இயக்குனர் அதன் பின்னர் கதைக்களத்தை தடுமாற வைத்து விட்டார்.. இறுதியில் கிளைமாக்ஸ் காட்சியில் என்கவுண்டர் திட்டத்தின் நோக்கம் என்ன? ஒரு உயர் அதிகாரி சொன்ன பிறகும் என்கவுண்டர் ஏன் செய்கிறார் மற்றொரு அதிகாரி என்பதற்கான விளக்கம் இல்லை.
நிறைய காட்சிகளில் நாடகத்தன்மை குடி கொண்டிருப்பதால் முழுமையாக ரசிக்கும் எண்ணம் வரவில்லை என்பதை உண்மை.
ஆக இந்த கடத்தல்.. சின்ன பட்ஜெட்டுக்காக ரசிக்கலாம்
