மைடியர் பூதம் திரை விமர்சனம்

சினிமா செய்திகள் திரை விமர்சனம்

திக்குவாய் குறைபாடுள்ள மாணவன் அஷ்வந்த்தை கிண்டல் செய்வதே சக மாணவர்களின் முழுநேர வேலை. மாணவர்கள் தான் இப்படி என்றால் பள்ளி ஆசிரியர்களும் இதே நோகடிப்பை தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தான் திருப்பம். பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் அஷ்வந்துக்கு ஒரு பொம்மை கிடைக்க, அது பொம்மையல்ல, பொம்மையல்ல, கர்க்கிமுகி என்ற பூதம்.

‘கர்க்கிமுகி’ பூதம் எப்படி பூமிக்கு வந்தது? பூதங்களுக்கென்று தனியாக ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தின் அரசன் தான் ‘கர்க்கிமுகி’. குழந்தை இல்லாத பூதத்துக்கு நீண்ட காலம் கழித்து வரமாய் ஒரு மகன் பிறக்க, அந்த மகன் ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொடுக்கிறது தந்தை ‘கர்க்கிமுகி’.
இந்த நிலையில் தான் முனிவர்களும் சாதுக்களும் வாழும் உலகத்துக்கு போய் அங்கே ஒரு முனிவரின் தவத்தை விளையாட்டாக ‘கர்க்கிமுகி’யின் மகன் ‘கிங்கினியா’ கலைத்து விட…முனிவர் சிறுவன் மீது சாபம் கொடுக்க, அந்த சாபத்தை தான் ஏற்றுக்கொள்கிறது ‘கர்க்கிமுகி’ பூதம். அதன் விளைவாக பூமியில் ஒரு பொம்மையாய் வந்து விழுகிறது பூதம். அதைத் தொட்டு துடைப்பவர்கள் மூலம் பூதம் உயிர் பெறும் என்பது சாப விமோசனம்.

அப்படி உயிர் கொடுப்பவர்கள் ஒரு மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொல்வதன் மூலம் மீண்டும் ‘கர்க்கிமுகி’ தன்னுடைய பூத உலகத்துக்கு சென்று மகனுடன் வசிக்க முடியும். இங்கே பூவுலகில் பூதம் கிடைக்கப் பெற்ற அஷ்விந்த்தோ திக்குவாய் குறைபாடு உள்ளவன். அவனால் அந்த நீண்ட நெடும் மந்திரத்தை சொல்லி பூதத்தை அதன் உலகத்துக்கு அனுப்ப முடிந்ததா என்பது சுவாரசிய திரைக்கதை.

பூதமாக பிரபுதேவா. தலையை மொட்டை அடித்து உச்சிக்குடுமியுடன் அவர் பூதமாக வரும் காட்சிகள் கலக்கல் ரகம். அற்புதங்கள் செய்யும் அந்த பூதம், சிறுவனை குஷிப்படுத்த ஆடும் மாஸ்டர் பாடல் நிஜமாகவே ‘மாஸ்டர் பீஸ்’.
இருந்தாலும் பல இடங்களில் பிரபுதேவாவையும் மிஞ்சி விடுகிறது சிறுவன் அஷ்வந்த்தின் திக்குவாய் நடிப்பு.
பிரபுதேவாவின் உந்துதலால் அவன் தன் திக்குவாய் பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வதும், பள்ளி மாறுவேட போட்டியில் ‘சரஸ்வதி சபதம்’ சிவாஜி போல் சரஸ்வதிக்கு பூஜை செய்து அம்மா… அப்பா… என்று பேச்சு வருவது போல் நடித்து இருக்கும் காட்சியில் கைதட்டல்களால் அதிர்ந்து போகிறது திரையரங்கம்.
அஷ்வந்த்தின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், நடிப்பு நிறைவு.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் இமானின் இசையும் பூதத்தோடு இணைந்த கூடுதல் அற்புதங்கள்.

என்.ராகவன் இயக்கி இருக்கிறார். பூதத்தை அதன் உலகத்துக்கு அனுப்பி வைக்க அஷ்வந்த் முயற்சி செய்யும் அந்த கிளைமாக்ஸ் ஒன்று போதும், இவரது இயக்கத்தை கொண்டாட. திக்குவாய் என்பது ஒரு குறை அல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான். அதற்கு சிகிச்சை செய்வதை விடுத்து திக்குவாய் உள்ளவர்களின் மனக்குறையை அகற்றி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தாலே அதிலிருந்து மீளலாம் என்கிற ஒரு மருத்துவ கருத்தையும் இந்தப் படத்தில் சொல்லி இருப்பதற்காக இயக்குனருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து.

மை டியர் பூதம், குழந்தைகளின் கொண்டாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *