சினிமா செய்திகள்நடிகர்கள்

அதிக பட்ச தொலைக்காட்சி பார்வையாளர்களைச் சென்றடைந்த சிபி சத்யராஜின் ‘போலீஸ் அவுர் டைகர்’ (நாய்கள் ஜாக்கிரதை இந்தி பதிப்பு)

சத்யராஜின் சொந்தப் பட நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம், சிபி சத்யராஜுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படமாகும். வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இப்படம் விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் தனித்துவமான வெற்றி, கதைத் தேர்வில் கவனம் செலுத்தும் நடிகர் என்ற பெயரையும் சிபிராஜுக்குப் பெற்றத் தந்தது. இன்றுவரை நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தொடர்ந்து அவர் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும், குழந்தைகளுக்கும், செல்ல நாய்களை வளர்ப்பவர்களுக்கும் இன்று வரை மனதுக்கு நெருக்கமான படமாகவே இது இருந்து வருகிறது.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் பிராந்திய எல்லைகளையும், மொழியின் தடைகளையும் கடந்து புகழப்படும் என்பது மீண்டும் ஒரு முறை இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது. ‘போலீஸ் அவுர் டைகர்’ என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படம், கடந்த வாரம் B4U கோடாக் சேனலில் ஒளிபரப்பானபோது 2099000 பார்வையாளர்களைப் பெற்றது. இது 2.09கோடி பேர் இப்படத்தைப் பார்த்ததற்கு சமம். சிபி ராஜின் மற்றொரு வெற்றிப் படமான ‘சத்யா’ யூ ட்யூபில் வெளியிடப்பட்ட பின் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து சிபிராஜ் நடித்து வருவதால், அகில இந்திய அளவில் அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு கிட்டி வருகிறது.

சிபிராஜ் மற்றும் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இணைந்த முதல் படமான ‘நாணயம்’ பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இணைந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படமும் வெற்றிக் கொடி நாட்டியது நினைவு கூறத் தக்கது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இருவருமே தனித் தனியாக நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து பணியாற்றி தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *