திரை விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி – திரைப்பட விமர்சனம்

திருமணம் செய்து கொள்ளாத உறவில் ஈடுபடும் தம்பதிகளாக அசோக் & முல்லை. இவர்கள் பெற்றெடுத்த குழந்தையை வறுமையின் காரணமாக கேரளாவில் வசிக்கும் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிக்கு (யார் என தெரியாமல்) விற்று விடுகின்றனர்.

10 மாதங்கள் ஆன நிலையில் தான் பெற்றெடுத்த குழந்தை தனக்கு வேண்டும் என்கிறார் முல்லை. எனவே சொல்லாதது உண்மை நிகழ்ச்சியில் நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் உதவியை நாடுகிறார் முல்லை.

அதன் பிறகு என்ன நடந்தது? ஒரு டிவி நிகழ்ச்சிநால் குழந்தையை மீட்டெடுக்க முடிந்ததா ? என்பதுதான் மீதிக்கதை.

சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சி நடத்தியவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.. இதில் சொல்லாதது உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்..

டிவி சேனல்களில் நடக்கும் பிளஸ் மைனஸ் இரண்டையும் காட்சிப்படுத்தியிருப்பது அவரின் தைரியத்தை காட்டுகிறது.

குழந்தையை விற்ற பெண்ணாக முல்லை என்பவர் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு கண்கலங்க வைக்கும். குழந்தையை விற்றது குற்றம் என்றாலும் அந்த தவறை உணர்ந்து அவர் காட்டும் முகபாவனைகள் அசத்தல்.

முல்லையின் லிவிங் டுகெதர் கணவனாக அசோக் நடித்திருக்கிறார்.. காட்சிகள் கொஞ்சம் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.. டிவியை நிகழ்ச்சியில் அவர் ஆட்டம் போடும்போது ரசிக்க வைக்கிறார்.

சமுத்திரக்கனி மற்றும் அபிராமி இருவரும் குழந்தை பெறாத தம்பதிகளாக நடித்துள்ளனர். படத்தின் ஆரம்பத்திலேயே இவர்களின் காட்சி ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பெற முடியாத பெண்ணின் உணர்வை அழகாக நடிப்பில் காட்டி இருக்கிறார் அபிராமி.

மிஷ்கின் ஓரிரு காட்சியில் வந்தாலும் மிரட்டல். இவர்களுடன் வினோதினி, சரண்யா ரவிச்சந்திரன், விஜே ஆஷிக் உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்துள்ளது எனலாம். அபிராமி – சமுத்திரக்கனியின் தவிப்பை காட்டும் போது உணர்வுகளுக்கு தன் இசையால் உயிரூட்டி இருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் அதன் வரிகள் நம்மை கவர்கிறது. படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. கேரளாவின் அழகையும் தமிழ்நாட்டின் அழகையும் நேர்த்தியாக படப்பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாகவே லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் படங்களில் யதார்த்தம் படம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும். இந்த படமும் விதிவிலக்கல்ல. ஒரு பொழுதுபோக்கு சினிமாவிலும் ஓர் அழகான உணர்வை சொல்வது தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் தனித்துவம்.

இந்த படத்தில் குழந்தை பெறாமல் தாய்ப்பால் கொடுக்க முடியும் என்பதை சொல்லி இருக்கிறார். இது இந்தியாவில் பிரபலமாகவில்லை என்றாலும் வெளிநாடுகளில் இதற்கான விஞ்ஞானம் வந்துவிட்டது என்பதையும் சொல்லி இருக்கிறார். அதை ஒரு காட்சியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்.

குழந்தை கடத்தல்.. கோர்ட் வழக்கு விசாரணை அது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்து இருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

முக்கியமாக கோர்ட் சீன்களில் சட்ட நுணுக்கங்களை அவர் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

இந்த படத்தில் சிபிஐ அதிகாரியாக ஒருவர் நடித்திருக்கிறார். அவர் நிஜமான வழக்கறிஞர் என்பதால் அவரின் ஆலோசனைகளையும் கேட்டு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

ஆக.. ஆர் யூ ஓகே பேபி.. குடும்பத்துடன் பார்க்க தகுந்த படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *