டீமன் DEMON திரைப்பட விமர்சனம்
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைகிறார் நாயகன்.
ஒரு கட்டத்தில் இவர் சொன்ன பேய்க்கதை பிடித்துப் போகவே படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வருகிறார்.
அதன்படி கதை விவாதத்திற்கு பெரிய அப்பார்ட்மெண்டில் பிளாட்டை வாடகைக்கு எடுக்கிறார் நாயகன். அன்று முதலே இவரது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது.
மொத்தம் 3 அறைகள் உள்ள ஒரு ப்ளாட்டில் 2 அறைகள் மட்டுமே உள்ளது என மொய் சொல்லி இருக்கிறார் புரோக்கர். ஒரு கட்டத்தில் தான் 3வது அறை இருப்பது நாயகனுக்கு தெரிகிறது.
அதில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் தான் இவருக்கு பிரச்சனை கொடுக்கிறது. அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்? அமானுஷ்ய சக்திகளின் நோக்கம் என்ன? நாயகன் இயக்குனர் ஆனாரா? அவரது வாழ்க்கை மாறியதா? என்பதுதான் மீதிக்கதை
ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, ‘கும்கி’ அஸ்வின் நடித்துள்ளனர்.
ஹீரோ சச்சின் கேரக்டர் பெயர் விக்னேஷ் சிவன். ஏன் இந்த பெயரை வைத்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்?
ரொம்பவே ஸ்மார்டாக வருகிறார் சச்சின். ஒரு கட்டத்தில் பேய் துரத்தும் போது பேய் அடித்த போலவே காட்டப்படுவது ஓகே.
நாயகியை கண்டதும் விழிவது.. பேயை கண்டதும் அலறுவது அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகி அபர்னதி அறிமுககாட்சி அழகு. இவருக்கு பெரிதாக வாய்ப்பில்லை.
நண்பனாக கும்கி அஸ்வின். காமெடி எதுவும் செய்யவில்லை. ஆனால் நண்பனுக்கு உதவும் கேரக்டரில் நேர்த்தியான நடிப்பு.
இவர்களுடன் பிளாஸ்பேக் காட்சியில் சேட்டு குடும்பம் வருகிறது. அதில் கூடுதல் கவனம் கொடுத்து இருக்கலாம் இயக்குனர்.
மற்றபடி நாயகனின் பெற்றோர்.. நாயகியின் பெற்றோர்.. நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஆர் .எஸ். அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிக்குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ பட ரோனி ரபேல் இந்தப் படத்தின் இசை. இசை அமைப்பாளரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்கு உதவியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நாயகி அறிமுகக் காட்சி.. ரொமான்ஸ் சாங் சீன்ஸ்.. நாயகி வேலை செய்யும் ஆர்ட் கேலரி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு.
கலை இயக்குனரும் தனது கை வண்ணத்தை அழகாக காட்டி இருக்கிறார். ஒரு கலை ஆர்வம் கொண்ட இயக்குனரின் வீடு எப்படி இருக்கும் என்பதை காட்டியிருப்பது சிறப்பு.
வழக்கமான பேய் பட பார்முலாக்களை உடைத்து சிட்டி, அதில் ஒரு அபார்ட்மென்ட் அதில் நடக்கும் அமானுஷ்யங்கள் என வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குநர் ரமேஷ் பழனிவேல்.
முக்கியமாக பேய் படங்கள் என்றாலே ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி இருக்கும். அதில் தான் கொலை செய்யப்பட்டது எப்படி? பேயாக வந்து பழிவாங்க என்ன காரணம் ஆகிய கதைகளை பேயே சொல்லும்.
ஆனால் இதில் வித்தியாசமாக நாயகன் கண் முன்னே ஒரு டிவி காட்சிகள் போல பிளாஷ்பேக் காட்சிகள் ஓடுகின்றன. இதில் வித்தியாசம் காட்டப்பட்டிருந்தாலும் கொல்லப்பட்டதற்கான காரணம் ? அந்த குடும்பத்திற்கும் நாயகனுக்கும் என்ன தொடர்பு என்ற விளக்கங்கள் இல்லை.
ஒரே தொடர்பு அந்த அப்பார்ட்மெண்டில் இவர் வாடகைக்கு வருகிறார் என்பது மட்டுமே .. முக்கியமாக இடைவேளை முடிந்த பிறகும் பிளாஷ் பேக் காட்சிகள் தொடங்கப்படாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நாயகன் ஓடுகிறார்.. பயப்படுகிறார் இப்படியாகவே படம் ஓடிக்கொண்டே இருப்பதால் நமக்கு தூக்கம் கண்ணை கட்டுகிறது..
இயக்குனராக வேண்டும் என நாயகன் ஆசைப்படுவதுடன் படம் தொடங்குகிறது. கடைசியில் அதற்கான காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை. இரண்டாம் பாகத்திற்கான க்ளுவை மட்டும் கொடுத்து இருக்கிறார்.. இயக்குனர் அது ஏனோ.?
ஆக DEMON டீமன்.. டைரக்டரின் பேய் டச்