அடியே பட விமர்சனம்
வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகன் ஜீவாவை அந்த நேரத்தில் டிவியில் வரும் அவனது பள்ளிப்பருவ காதலியின் பேட்டி தடுத்து நிறுத்துகிறது. அந்த பெண் இப்போது பிரபல பாடகியாக இருந்து வருகிறார். பாடல் துறையில் தனது வளர்ச்சிக்கு தன்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவனின் பாராட்டு கடிதமே காரணம். அவரை எப்போது சந்தித்தாலும் என் வாழ்க்கை அவருடன் தான் என்கிறார்.
உண்மையில் அந்த பெண்ணுக்கு அப்படியொரு கடிதம் எழுதியது ஜீவா தான். தனது பள்ளிப் பருவ காதலி பள்ளியில் நடந்த பாடல் போட்டி ஒன்றில் தோற்றுப் போக, அதற்காக அவள் அழுது புலம்ப, அப்போது அவளை தேற்றும்விதமாக ஒரு கடிதம் எழுதி அவள் புத்தகப் பைக்குள் நாயகன் வைத்து விட, அதுவே நாயகியை பெரிதும் ஆறுதல் படுத்துவதோடு, பாடகியாகவும் உயர்த்துகிறது. இதை தனது மானசீக காதலி டிவி பேட்டியில் சொன்னதும், அந்த கடிதத்தை எழுதியதே நான் தான் என்று சொல்லத் துடிக்கும் நாயகன் அவசரமாக அவளைப் பார்க்க வாகனத்தில் பறக்க…
இப்போது விபத்து. நாயகன் மயக்க நிலையில். இதில் ஆச்சரியம், கண் விழிக்கும்போது நாயகன் புதிய உலகத்்தில் இருக்கிறார்.
புதிய உலகமும் இதே சென்னை தான் என்றாலும், இப்போது நாயகன் ஜீவாவுக்கு இங்கே அர்ஜூன் என்று பெயர். இசையே தெரியாத அவர் இ்நத புதிய உலகில் பிரபல இசையமைப்பாளர். இதை விட ஆச்சரியம், இந்த உலகில் அவரது மனைவி இதே பாடகி தான். தன் காதலி தனக்கு கிடைத்து விட்ட நிம்மதியோடு புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தொடங்கும் நேரத்தில் மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்க…
இப்போது நாயகனின் காதலி அவனது நண்பனின் காதலி. சீக்கிரமே அவர்களுக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்த இரண்டு கதைகளின் பின்னணி என்ன? நாயகன் மீண்டும் பழைய உலகம் வந்தானா? அவன் மானசீக காதல் என்னாயிற்று என்பதை பரபரப்பாகவும், எதிர்பார்ப்புடனும் சொல்வது தான் இந்த ‘அடியே’.
டைம் டிராவல், டைம் லூப் போன்ற அறிவியல் தொடர்பான பாணியிலான திரைப்பட வரிசையில் பேர்லல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் பாணி கதையை, அழகான காதலுடன் இணைத்த விதத்தில்படம தனி கவனம் பெறுகிறது.
பள்ளி மாணவன், இளைஞன், காதலியின் கணவன் என எல்லா வேடங்களிலும் கச்சிதமாக பொருந்துகிறார் ஜி.வி. பிரகாஷ். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் இடங்களில் அதை தனது நடிப்பில் வெளிப்படுத்தும் இடங்கள் அழகு.
நாயகியாக நடித்திருக்கும் கெளரி கிஷன் பள்ளி மாணவி, பாடகி, குடும்பத்தலைவி என முன்று பரிமாணங்களிலும் நடிப்பால் நிறைகிறார்.
நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், தனது ஸ்டைலில் சிரிப்பு மூட்டுகிறார். மற்றொரு நண்பராக வரும் மதும்கேஷ் நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.
கெளதம் மேனனாக நடித்திருக்கும் வெங்கட் பிரபு, தன்னைத்தானே நக்கல் அடித்துக் கொள்ளும் இடத்தில் ரசிக்க வைக்கிறார்.
இயக்குநர் மணிரத்னம் வேகப்பந்து வீச்சாளர், பயில்வான் ரங்கநாதன் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர், கூல் சுரேஷ் பேசும் திறனற்றவர், பாரதப் பிரதமர் கேப்டன் விஜயகாந்த் இப்படி ரசிக்கக்கூடிய ஏகப்பட்ட அம்சங்கள் படத்தின் பிளஸ்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்த, ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்்தின் ஜீவன்.
டைம் டிராவல் கதையை காதல் கதையோடு சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இடையிடையே வேறுவேறு உலகத்தில் தடுமாறும் ஜி.வி.பிரகாஷைப் போல ரசிகளை தடுமாற விட்டாலும் கிளைமாக்சில் சுகமாக சுபம் போடுகிறார்.
அடியே, திரைக்கதைக்கு புதுசு. ரசிகர்களுக்கும்.