கடைசி காதல்கதை திரை விமர்சனம்
காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் மனநல பாதிப்புக்குள்ளாகிறார். அதற்காக பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார்.
அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், நடிப்பில் அனுபவஸ்தராக தெரிகிறார். எல்லை மீறத்துடிக்கும் காதல் காட்சியிலும் சரி, ஆவேசப்படும் காட்சிகளிலும் சரி, தனது கேரக்டரின் மனஉணர்வை அப்படியே கடைசி ரசிகன் வரை நடிப்பால் கடத்தி விடுகிறார்.
அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி, தொடாமல் செய்யும் தூய காதல் என்று காதலனுக்கு புதிய கண்டிஷன் சொல்லி மிரள வைக்கிறார். அதற்கேற்ப நடிக்கவும் செய்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் புகழ், விஜே ஆஷிக், நோபல் நாயகனிடம் எக்குத்தப்பாக மாட்டிக் கொள்ளும் இடத்தில் சிரிக்க வைக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக வரும் சாம்ஸ் வாயைத் திறந்தாலே சிரிப்பு மழை தான். நகைச்சுவையில் காமெடிக் கதகளியே ஆடியிருக்கிறார். அவரை எரிச்சலாய் பார்க்கும் காவல்துறை அதிகாரியாக மைம்கோபி சீரியசாக பேசும் இடங்களெல்லாம் அரங்கம் அதிர்கிறது. மனநல மருத்துவராக இயக்குனர் ஆர்.கே.வித்யாதரனே நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் வரை சிரிக்க வைப்பவர், கிளைமாக்சில் புதிய தத்துவம் சொல்லி மனதை டச் செய்கிறார்.. அவர் பீடிங் பாட்டில் மூடியை சப்பும் காட்சிகளில் குழந்தைகள் வரை சிரிப்பார்கள்.
சேத்தன் கிருஷ்ணா இசையில் பின்னணி இசை சிறப்பு.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார். படம் தொடங்கியதிலிருந்து முடியும்வரை இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் விரசம் தோன்றாமல் சிரிக்க வைக்கிற வித்தை இவரது ஸ்பெஷல். நாயகியின் தங்கை கேரக்டர் எல்லை மீறுகிற இடங்களில் மட்டும் ‘ஏ’ எட்டிப் பார்க்கிறது.
காதல் கதைக்குள் ஒரு காமெடி பூகம்பம்.