திரை விமர்சனம்

காலேஜ்ரோடு பட விமர்சனம்

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல… அது நம் உரிமை என்பதை கமர்ஷியல் கலந்து பேசியிருக்கிறது இந்த ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.
சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார், லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனாக வரும் லிங்கேஷ் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான நடிப்பு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. குறிப்பாக காதலியுடனான தொடர்பை துண்டிக்கும் இடத்தில் அந்த ஆழமான அமைதி ஆசம்.
நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது.
காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். அதுவும் கதையை கலகலப்பாக நகர்த்த உதவுகிறது.
யூத்புல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்பிரமணியம் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் ஆப்ரோ தன் வேலையை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஷ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது.
எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகி விடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் பிரம்மாண்டத்தையும் கதையின் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது ஆச்சர்யம். கல்விக் கடன் பின்னணியில் ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள காலேஜ்ரோடு, நிச்சயமாக பார்க்க வேண்டிய படம். காலத்திற்கேற்ற படமும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *