சினிமா செய்திகள்திரை விமர்சனம்

‘ராங்கி’ விமர்சனம்

த்ரிஷா கதைநாயகியாகவும் கதாநாயகியாகவும் நபத்துள்ள படம் ராங்கி.

இயக்குநர் ஏ .ஆர். முருகதாஸ் கற்பனையில் உருவான கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை எம். சரவணன் இயக்கி உள்ளார்.லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

தேர்ட் ஐ என்கிற இணையதளம் நடத்தி வருகிறார் த்ரிஷா.அவரது அண்ணன் மகள் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றை யாரோ ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் மூலம் பல இளைஞர்களைக் கவர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பி சதி செய்கிறார்கள். அதில் அண்ணன் மகள் பிரச்சினைக்கு
உள்ளாகிறாள்.இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய களத்தில் இறங்குகிறார் த்ரிஷா.போலிக் கணக்கு யாரால் தொடங்கப்பட்டது என்று அறிகிற போது அதிர்ச்சி அடைகிறார்.

துணிச்சலாக அந்தக் கணக்கில் சாட்டிங் செய்தவர்களை வரவழைத்து கண்டித்து அனுப்புகிறார்.

நடுரோட்டில் இரவில் தன்னிடம் தவறாக நடக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் அத்துமீறலை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தி வைரலாக்குகிறார். இப்படி தனி மனுசியாக ஒன் மேன் ஆர்மியாக சேனல் நடத்தி வருகிறார்.

இப்படி இருக்கும் அவரை அதிபயங்கர தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவராக நினைத்து ஒரு நாள் ரகசியமாக வெளிநாட்டு உளவுத்துறை அள்ளிக் கொண்டு செல்கிறது.
இந்திய உளவுத்துறையும் அந்த முயற்சியில் ஒத்துழைக்கிறது. வெளிநாட்டுக்கு ஏன் அழைத்துச் செல்கிறது .அதன் பின்னணி என்ன?
தீவிரவாதிகளுக்கும் த்ரிஷாவுக்கும் என்ன தொடர்பு? என்ற மர்மங்களுக்கு எல்லாம் விடை சொல்வதுதான் ராங்கி படத்தின் மீதிக்கதை.

த்ரிஷா ரசிகர்களுக்கு இப்படம் தெவிட்டாத விருந்து. ஏனென்றால் அனைத்து பிரேம்களிலும் த்ரிஷா முகம் காட்டுகிறார் . கண் குளிர ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

கிராமங்களில் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த பெண்களை ராங்கி என்பார்கள்.அப்படிப்பட்ட யாருக்கும் அஞ்சாத பெண்ணாக ராங்கி என்கிற டைட்டில் ரோல் ஏற்று நடித்துள்ளார் த்ரிஷா.ராங்கி என்கிற குணத்தை வெளிப்படுத்தும் திமிர் பிடித்த,
துணிச்சலான தனி ஆளுமை உள்ள பெண்ணாக வரும் த்ரிஷா அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
தன் குடும்பத்தினரிடமும் மற்றவர்களிடமும் டிராபிக் போலீசிடமும் அவர் தனது நேர்கொண்ட பார்வையால் அனைவரையும் எதிர்கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறார்.

படத்தில் அவர் பெயர் தையல் நாயகி. அதற்கு அவர் தரும் விளக்கமும் பொருத்தம். அக் கதாபாத்திரத்தில் த்ரிஷா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். அது மட்டுமல்ல படம் முழுக்க ஒவ்வொரு பிரேமிலும் அவர் வருவதால் பார்வையாளர்களுக்கு நிறைவு தருகிறது.
திரிஷாவின் அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா சுமாரான தோற்றம் அசாதாரணமான நடிப்பு.தீவிரவாதி ஆலிமாக வரும் அந்த வெளிநாட்டு இளைஞனும் மனதில் பதிகிறார்.

அது மட்டுமல்லாமல் இரண்டாவது பாதியில் கதை உஸ்பெகிஸ்தானுக்கு நகர்கிறது . ஆனால் எந்த ஊர் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை.அங்கே உள்ள நிலப் பகுதி, மலைப்பகுதி, பாலைவனம், ஏராளமான வீடுகள், தீவிரவாதிகள் , கட்டடங்கள் ,அங்கே நடைபெறும் சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள் என்று கண்கொள்ளாக் காட்சிகளாக வருகின்றன.

இப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு விலாவாரியாக சுற்றிக் காட்ட நம்மை பாஸ்போர்ட் விசா இல்லாமல் அழைத்துக் கொண்டு சென்ற அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.

த்ரிஷா வெளிநாடு சென்றபின் கதையில் வேகம் எடுக்கிறது. பரபரப்பான திருப்பங்கள்.தீவிரவாதிகளுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பது யோசிக்க முடியாத ஒன்று.

இப்படி ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்குள் பிரமாண்டமான நிலக்காட்சிகளைக் காட்டி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குநர்.இந்தப் படத்திற்குள் பேசப்படும் பல அர்த்தமுள்ள வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை இயக்குநர் சிந்தித்திருக்கலாம். ஆனால் அதைக் காட்சிப்படுத்த ஆகும் செலவினைத் துணிந்து செலவழிக்க ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமும் அதன் தலைமைக்குத் தைரியமும் வேண்டும் .அதை லைக்கா துணிந்து செய்துள்ளது.
அது மட்டுமல்ல அதை லைக்கா மட்டும் தான் செய்ய முடியும்.அந்நிறுவனத்திற்கு மட்டுமே இப்படி ஒரு புலிப்பாய்ச்சல் பாய, தைரியம் உள்ளது.

காகிதத்தில் வரிகளாக இருக்கும் கனவை கண் முன் காட்சிகளாக்கிக் காட்டுவது என்பது பெரும் பொருளாதார சவால். அதை எதிர்கொண்டு லைக்கா சாத்தியப்படுத்தி வென்றுள்ளது.

ஒளிப்பதிவு சக்திவேல், இசை சத்யா.இருவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்துள்ளனர்.
கதை, திரைக்கதை,நட்சத்திரங்களின் நடிப்பு காட்சிப் பிரம்மாண்டங்கள் தொழில்நுட்ப சேர்மானங்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு முழுமையான திரை அனுபவத்தைத் தருகிறது ராங்கி.

புதிய உலகத்திற்கு இட்டுச் சென்றது போல் ஒரு உணர்வைத் தருகிற இந்த ராங்கி படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது ஒன்றுதான் அதற்கு நாம் செய்யும் நியாயம்.ராங்கி விழிகளை விரிய வைக்கும் லொகேஷன் பிரம்மாண்டம்.லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மகுடத்தில் மற்றும் ஒரு வெற்றிக்கல் இந்த ராங்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *