திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் ‘மான்வேட்டை’
‘அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள்’ புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் ‘மான் வேட்டை.’ விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை டி கிரியேஷன்ஸ் சார்பில் சார்பில் இயக்குநர் எம்.திருமலை தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசுகையில், ‘‘இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல் வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்றார்.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் பேசுகையில், “ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும். அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்’’ என்றார்.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசுகையில், ‘‘படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்’’ என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுகையில், ‘‘எல்லா விஷயங்களுக்கும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது’’ என்றார்.
நடிகர் ரவி மரியா பேசுகையில்,
“நண்பர் திருமலை எல்லா பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கக்கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்போதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்’’ என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், ‘‘இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை’’ என்றார்.
ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், ‘‘எனது நண்பன் தான் இந்த படத்தின் கதாநாயகன், அவன் ஒரு கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர்’’ என்றார்.