கட்சிக்காரன் பட விமர்சனம்
ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்த ஒரு தொண்டன், அதே கட்சித் தலைவர் மூலம் தனக்கு பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான இழப்பீடு கேட்பதும் தான் இந்த கட்சிக்காரன் படத்தின் கதை.
குடும்பத்தை பாராமல் தான் சார்ந்த கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கடைசி வரை தன் உடம்பை உருக்கிய தொண்டன் சரவணன் ஒரு கட்டத்தில் தன் தலைவனின் நிஜமுகம் தெரியவருமபோது எடுக்கிற முடிவே கதைக்களம் என்பதால், படம் தொடங்கியதில் இருந்தே வேகம் பிடித்து விடுகிறது.
தலைவர் மீது உயிரான தொண்டனாக நாயகன் சரவணன், கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அந்த அப்பாவி முகமும் வெள்ளந்தி குணமும் அவரை அந்தப் பாத்திரத்தில் அழகாக பொருத்திக் கொள்கின்றன. தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைப்பது, போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது,கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடும் சரவணன் இந்த கேரக்டருக்குள் காட்டியிருக்கும் உணர்வுகள் அற்புதம். தலைவரை எதிர்ப்பது என்று ஆகிவிட்ட நிலையில், தன்னுடன் இருந்த சிறு கூட்டம் பிய்த்துக் கொண்டு ஒட, அப்போதும உறுதி தளராத அந்த கேரக்டர் நிஜமாகவே திரையில் மாயாஜாலம் நிகழ்த்துகிறது.
சரவணனின் மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக சரியாகப் பொருந்துகிறார். நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் ெகாட்டுகிறார். அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் பிளஸ்.
தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலி அவ்வப்போது சிரிப்பை சிதறவிடுகிறார்.
எதிலும் முதலீடு செய்யும் போது அதன் பலனை எதிர்பார்ப்பது நியாயம் தானே? வங்கியில், பங்குச்சந்தையில், நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து விட்டு வட்டியுடன் பெருகும் பணத்தை எதிர்பார்ப்பதில்லையா?
அது போலவே அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை வைத்து தொண்டர்கள் உழைப்பை முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யும் தொண்டனுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று கேள்வி கேட்கிறது இந்தப் படம்.
மதன் குமார் ஒளிப்பதிவு காட்சிகளில் பிரமாண்டம் கூட்டுகிறது.
ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா இசையில் வரும் இரண்டு பாடல்களும் ரசனை. ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற டூயட் பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வர, இன்னொரு பாடலாக வரும் ‘கட்சிக்காரன் கட்சிக்காரன்’ உணர்ச்சியின் உச்சம்.
படத்திற்குப் பெரும் பலமே துணிச்சலான வசனங்கள் தான். ஆனால் வெறும் வசனங்களை மட்டும் வைத்து ஒரு படத்தை நிறைவு செய்துவிட முடியாது. சில இடங்களில் வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டே இருப்பது பலவீனம்.
அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மனதில் பதிந்திருக்கும் பல அபிப்ராயங்களை மாற்றும் வகையில் துணிச்சலான வசனங்களில் மூலம் சில உண்மைகளைப் போட்டு உடைக்கிறார்கள். அப்படிச் சொல்ல வந்த கருத்துக்காக இந்த முயற்சிக்கு தோள் கொடுக்கலாம்
அழுத்தமான கதையை எளிய முறையில் சொன்ன இந்த படம், காட்சிகளில் கூடுதல் அழுத்தம் கொண்டிருந்தால் இன்னமும் பரபரப்பை கூட்டியிருக்கும். எனினும் இன்றைய அரசியலை தோலுரித்த வித்தில் இயக்கிய ப.ஐயப்பனை கொண்டாடலாம்