திரை விமர்சனம்

சிவி-2 பட விமர்சனம்

கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து கொண்டு பழிவாங்கும் இந்த கதை பலருடைய கவனத்தை சிலிர்ப்புடன் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, நடிகர் சரண்ராஜின் மகன் தேஜா சரண்ராஜ் கதாநாயகன்களாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்ரி இருக்கிறார்கள்.
முதல் பாகம் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள அமானுஷ்யம் பற்றியும் பரபரப்பாக சொன்னது. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அந்த ஆஸ்பத்திரிக்குள் இன்னமும் அதே பேய் இருக்கிறதா? அமானுஷ்யம் தொடர்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளவும் அதை யு டியூப்பில் லைவ் நிகழ்ச்சியாக காட்டி பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவ, மாணவிகள் சிலர் பாழடைந்த நிலையில் உள்ள அந்த மர்ம ஆஸ்பத்திரிக்குள் பயணப்படுவது இரண்டாம் பாகம். இந்த ‘திக்…திக்…’ திகில் பயணத்தில் அவர்களுக்கு நேர்ந்தது என்ன என்பதே இரண்டாம் பாகம்.
காணாமல் போன தங்கள் மகன், மகள்களை கண்டு பிடித்து தர போலீசில் புகார் அளிக்கும் பெற்றோரின் பதற்றத்தில் இருந்து படத்தை தொடங்குகிறார்கள். போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவமனை போகிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைய…

இப்போது திரும்பி வராத மாணவ, மாணவிகள் நிலை என்ன என்பது ஆவி பறக்கும் கிளைமாக்ஸ்.

ஆரம்பத்தில் கலகலப்பாக ஆஸ்பத்திரிக்குள் துப்பறியும் மாணவர்கள் போகப்போக ஆவி ஆக்கிரமிப்பில் சிக்கி சின்னாபின்னமாகும் காட்சிகள் பதற்றத்தின் உச்சம்.

சாம்சுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். (போதைக்கு பாட்டில் பாட்டிலாக வாய்க்குள் கவிழ்ப்பதையும் சிகரெட்டுகளாக ஊதித் தள்ளுவதையும் தவிர்த்திருக்கலாம்.) லைவ் நிகழ்ச்சியில் மாணவர்களை வழி நடத்தும் கேரக்டரில் தேஜ் சரண்ராஜ் கவர்கிறார். சஞ்சய் ஒளிப்பதிவில் ஆவி அட்டகாச காட்சிகள் படம் முடிந்த பிறகும் பயமுறுத்தும் ரகம்.

முதல் பாகத்தை இயக்கிய கே.ஆர்.செந்தில்நாதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். முதல்பாக ஆவி அனுபவம் இரண்டாம் பாகத்திலும் கைகொடுத்திருக்கிறது. தாடிபாலாஜி தொடர்பான அந்த போலீஸ் நிலைய காட்சி இயக்குனர் முத்திரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *