தூவல் – திரை விமர்சனம்
தூவல் என்பது மூங்கில் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறையாகும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள சிங்காரப்பேட்டை கிராமம் தான் கதைக்களம். அந்த ஊரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வரும் மீன்களை தூவல் முறை மூலம் பிடிப்பதே இவர்களது தொழில்.
இந்த தொழில் அந்த ஊரின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகவும் ஆகிவிடுகிறது. இந்நிலையில் தூவல் முறை மூலம் பிடிக்கும் மீன்களை விட வெடி வைத்து பிடித்தால் அதிக மீன்களை அள்ளலாமே என்று பேராசை கொள்ளும் ஊர் பெரியவர் ஒருவர் மீன்களை வெடி வைத்து பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவே பிரச்சனையாகிறது. ஏற்கனவே அந்த ஊரின் வனச்சரகர் காட்டு வளங்களை எப்படி எல்லாம் சுரண்ட முடியுமோ அப்படி எல்லாம் சுரண்டுகிறார். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கூட தேடிப் பிடித்து மாமூலை பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் இவரது கவனம் ஆற்று மீன்கள் பக்கமும் எட்டிப் பார்க்க, தூவல் தூறல் ஆகிறதா? அல்லது மழையாக கொட்டுகிறதா? என்பது மீதிக் கதை.
கிராமத்துக்கு ஒன்று என்றால் வரிந்து கட்டும் முதல் ஆளாக வரும் இளையா நடிப்பில் கவர்கிறார். வெடி வைத்து மீன் பிடிக்கும் அந்த வில்ல கேரக்டரில் சிவம் நின்று நிலைக்கிறார். வனச்சரகராக வரும் ராஜ்குமார் வில்லன் நடிப்பில் தேறித் தெரிகிறார்.
S. A. தர்வேஸ் ஒளிப்பதிவும், படமா சதீஷ் இசையும் இந்தஅருவி பின்னணியிலான கதைக்கு பலம் சேர்க்கின்றன. ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். பிழை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தூவல் படம் மூலம் இயக்கத்தின் அடுத்த எல்லையை தொட்டு இருக்கிறார். மீன் வளர்க்க ஆசைப்பட்டு அது முடியாமல் போக, தானாகவே மீன் பிடிக்க தயாராகும் அந்த சிறுவன் கேரக்டர் நிஜமாகவே அழகான கிராமத்து கவிதை. ஆற்றில் பிடித்த மீனை அவன் என்ன செய்கிறான் என்பது மொத்த படத்துக்குமான விடை.
புதிய கதைக்களம், இயல்பான கிராமத்து மனிதர்கள், சலசலக்கும் அருவி என ஒரு இயல்பான கதைக்களம் தந்த வித த்திலும் இந்த தூவல் மனதுக்கு இதமாகி விடுகிறது.