திரை விமர்சனம்

பெண் உரிமை..; லைசென்ஸ் விமர்சனம் 3.25/5

பாரதி (ராஜலட்சுமி) இவரது தந்தை ராதாரவி ஒரு போலீஸ் அதிகாரி. தன் தந்தை போலவே இவரும் போலீசாக நினைக்கிறார்..

ஒரு கட்டத்தில் சிறுவயதில் தன் கண்முன்னே தன் தோழிக்கு ஏற்படும் பாலியல் குற்றத்தால் இவர் மன உளைச்சல் பாதிப்புக்குள்ளாகிறார்.

இதனால் தோழி தற்கொலை செய்து கொள்ளவே.. தன் தந்தை ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் தோழி உயிரை காப்பாற்றாத காரணத்தால் தந்தையுடன் பேசுவதை நிறுத்தி விடுகிறார்.

அன்று முதல் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து போராடுகிறார். அன்றுமுதல் காவல்துறை பணியையும் வெறுத்து பின்னர் ஆசிரியர் ஆகிறார்.

ஒருநாள் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவனுக்கு எதிராக போராடுகிறார். ஆனாலும் அவன் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

இதற்கெல்லாம் தீர்வு காண துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என மனு கொடுக்கிறார்.

அவருக்கு GUN LICENCE லைசென்ஸ் கிடைத்ததா? குற்றவாளிகளை தண்டித்தாரா.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை

பல மேடை நிகழ்ச்சிகளிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் பாடகியாக நாம் பார்த்து பழக்கப்பட்ட ராஜலக்ஷ்மி லைசன்ஸ் படத்தின் மூலம் கதையின் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படம் என்றாலும் முத்திரை பதிக்கும்படியான நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்கள்..

அபி நட்சத்திரா, என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா உள்ளிட்டோர் தங்கள் நடிப்பில் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

அபி நட்ஷத்திரா அரை மணி நேரமே வந்தாலும் நம்மை அசத்தி விட்டு செல்கிறார். முக்கியமாக தந்தை ராதாரவியிடம்.. “ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாத உன்னால் சமூகத்திற்கு ஒரு பிரஜோனமும் இல்லை.. உனக்கு ஏன் இந்த போலீஸ் யூனிபார்ம்? என்று அவர் பேசும் வசனங்கள் மூலம் காவல்துறைக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்.

ராஜலட்சுமிக்காக வாதாடும் வக்கீலும் அழுத்தமான வசனங்களை நிறுத்தி நிதானமாக உச்சரித்து பேசி நம்மை கவனிக்க வைக்கிறார்.

காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் பின்னணி இசையும் பாடல்களும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் கோர்ட் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் இன்றும் மறக்க முடியாத எவர்கிரீன் படம் என்றால் அது விதி என்ற படம் தான். அந்தப் படத்தைப் போல இந்த படத்திலும் இடைவேளைக்குப் பிறகு வரும் கோர்ட்டு காட்சிகள் பரபரப்பை உண்டாக்குகிறது.

அதில் சொல்லப்பட்டுள்ள ஆழமான கருத்துக்கள் அழுத்தமான வசனங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தோலுரித்துக் காட்டி இருக்கின்றன. முக்கியமாக பாரதி ராஜலஷ்மிக்காக வாதாடும் வக்கீல் வைக்கும் வாதங்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

துப்பாக்கி லைசென்ஸ் கொடுப்பது தன்னை தற்காத்துக் கொள்ளவே தவிர அடுத்தவரை பழிவாங்க அல்ல.. அடுத்தவரை கொல்வதற்கு அல்ல..

ஒருவேளை துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டால் அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் துப்பாக்கி சூடுகளை நாம் தமிழ்நாட்டிலும் பார்க்க கூடும் என்பதை காவல்துறை வலியுறுத்தி இருப்பது தக்க பாடம்.

உங்களை பாதுகாத்துக் கொள்ள லைசென்ஸ் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.. குற்றவாளிகளை ஒடுக்க மக்களை பாதுகாக்க காவல்துறை இருக்கிறது என்ற வாதங்கள் சரியானவை தான்.

ஆனால் காவல்துறை இருந்தும் நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் வன்முறை சசம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி எப்போது? என்பதுதான் இந்த சமூகத்தின் கேள்வி ஆகும்.

பெண்கள் உரிமைக்காக இந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கணபதி பாலமுருகன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *