திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களுக்கு விருந்து.; லியோ விமர்சனம் 4/5…

ஹிமாச்சல் பிரதேசத்தில் காபி ஷாப் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார் விஜய். இவரது மனைவி திரிஷா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஒருநாள் இவர்களது காபி ஷாப்பில் கொள்ளையர்கள் மிஷ்கின் மற்றும் சாண்டி வந்து பிரச்சனை செய்கின்றனர். அப்போது தற்காப்புக்காக அவர்களை சுட்டு தள்ளுகிறார் விஜய். எனவே விஜய் கைது செய்யப்படுகிறார்.

அதே சமயம் அவர் குறி தவறாமல் சுட்ட விதத்தை கண்காணித்த காவல்துறை சந்தேகம் கொள்கிறது. இந்த சூழ்நிலையில் விஜய் மீடியாக்களில் புகழ் பெற அவரது போட்டோக்கள் செய்தித்தாள்களில் வருகிறது. அப்படியாக தமிழ்நாடு தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கிறது.

அங்கு விஜய்யின் புகைப்படத்தை பார்க்கும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கேங்ஸ்டர்ஸ் இவன் பார்த்திபன் அல்ல.. லியோ தாஸ் என்று ஹிமாச்சல் வருகின்றனர்.

உண்மையை சொல் என்று அவர்கள் விஜய்யை டார்ச்சர் மேல் டார்ச்சர் செய்கின்றனர். ஆனால் நான் பார்த்திபன் தான் என்கிறார் விஜய்.

உண்மையில் விஜய் யார்? லியோ தாஸ் இருந்தாரா? அவருக்கும் இந்த விஜய்க்கும் தொடர்பு இருக்கிறதா? விஜய்யை வில்லன்கள் மிரட்ட என்ன காரணம்? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.. விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, அர்ஜுன், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின், மரியம் ஜார்ஜ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வழக்கம் போல லோகேஷ் பாணியில் இந்த விஜய் படம் இருக்கிறது. அதே சமயம் விஜய்க்கு பெரிய பஞ்ச் டயலாக்குகள் எதையும் கொடுக்காமல் நார்மலான குடும்பஸ்தனாக காட்டியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு அதிரடி ஆக்சன் அதகளம் செய்துள்ளனர்.

விஜய் படத்தில் எப்போதும் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது. அதை கொஞ்சம் கூட குறையாமல் கொடுத்திருக்கிறார் லோகேஷ். அதேசமயம் கொஞ்சம் ரொமான்ஸ்.. கொஞ்சம் காமெடி கொடுத்து இருக்கலாம்..

முழுக்க முழுக்க வழக்கம் போல கஞ்சா போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி இந்த கதையும் நகர்த்தி இருக்கிறார் லோகேஷ்.

நாயகிகள் த்ரிஷா பிரியா ஆனந்துக்கு பெரிய வேலை இல்லை. விஜய் படத்தில் நாங்களும் இருக்கிறோம் என இவர்கள் சொல்லிக் கொள்ளலாம்

.ஆனால் விஜய்யின் உடன் பிறந்த இரட்டை குழந்தையாக மடோனா நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே என்றாலும் ஆட்டமும் போடுகிறார் அதிரடியும் காட்டி இருக்கிறார்.

வழக்கமாக விஜய் படங்களில் என்ட்ரி இன்ட்ரோ இருக்கும். ஆனால் இதில் விஜய்யை சாதாரணமாக காட்டி அர்ஜுனை மாஸ் என்ட்ரி கொடுக்க வைத்துள்ளார்.

சஞ்சய் தத் மெயின் வில்லன் என்றாலும் அர்ஜுன் தான் நம் கவனம் இருக்கிறார். இவர்கள் நரபலி கொடுப்பது எல்லாம் இந்த காலத்திலும் இருக்கிறதா ? பெற்ற குழந்தைகளை சஞ்சய் தத் நரபலி கொடுக்க நினைப்பது நம்பவே முடியாத திரைக்கதை.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மிஸ்கின் மற்றும் சாண்டி மிரட்டி இருக்கின்றனர். இவர்களை விஜய் அடிக்கும் ஆக்சன் செம. ஆனால் அந்த ஆக்ஷன் காட்சியில்.. தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்ற பாரதிராஜாவின் பாடலை போட்டு வேறு விதமாக காட்டி இருக்கின்றனர். பின்னணி இசை கொடுக்க அனிருத் கால்ஷீட் கொடுக்கவில்லையா?

மனோஜ் பரஹாம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.. ஹிமாச்சல் பிரதேஷ் காட்சிகள் முதல் தமிழக காட்சிகள் வரை அனைத்தையும் ரசிகர்களுக்கு நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

மரியம் ஜார்ஜ் வரும்போது அவர் கைதி படத்தின் எல் சி யு கேரக்டர் என தெரிய வருகிறது. அதுபோல கடைசி காட்சியில் விக்ரம் கமல் வந்து வாய்ஸ் கொடுப்பது கவனிக்க வைக்கிறது.

எல் சி யு காட்சியை மையப்படுத்தியே படங்களை இனியும் தொடர்வாரா லோகேஷ் கனகராஜ்?

மன்சூர் அலிகான் கொஞ்ச நேரமே என்றாலும் சீரியஸான இந்த லியோ படத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கிறார்.. படம் முழுவதும் அனிருத்தின் ஆட்சி தெரிகிறது.. அதற்கு முக்கிய காரணம் அவரது பின்னணி இசை.

உண்மையில் விஜய் யார் பார்த்திபனா லியோ தாசா என்ற யூகிக்க முடியாத திரை கதையை அவர் அமைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் தான் இவர் என்பது போலவே தெரிய வருகிறது. அதில் கொஞ்சம் ட்விஸ்ட் கொடுத்து இருக்கலாம்.

நான் ரெடி என்ற பாடலும் பேட் ஹாஷ் என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.. ஃபிளாஷ்பேக் காட்சியில் விஜய் க்யூட்டாக இருக்கிறார்.. ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான பிறகு அவரது ஹேர் ஸ்டைல் இப்படியா மாறி இருக்க வேண்டும்.. அது கொஞ்சம் கூட ரசிக்கும்படியாக இல்லை.

ஆக விஜய் படத்தில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுத்து விஜய் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *