முன்னாள் எம்.எல்.ஏ. ஆடுகளம் நரேனை கொலை செய்ய கூலிப்படை கும்பல் ஒன்று, ஐஸ்வர்யா ராஜேஷின் வாடகைக் காரில் பயணிக்கிறது. அவர்கள் யார்? என்று தெரியாமல் அவர்களை தனது காரில் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களைப் பற்றி தெரிய வந்ததும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் போலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷை போனில் தொடர் கொண்டு உதவி கேட்கிறது. போலீஸ் துரத்துவதை தெரிந்து கொள்ளும் கூலிப்படையினர், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்தே தப்பிக்க முடிவு செய்ய…
கொலைக்கு அஞ்சாத அவர்களிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பினாரா? இல்லையா? என்பது யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
வாடகைக்கார் டிரைவர் ஜமுனா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக பொருந்துகிறார். கூலிப்படையிடம் சிக்கிக் கொண்ட பிறகு அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடுபவர், அதன்பிறகு காட்டும் ரியாக்–ஷன்கள் ஒவ்வொன்றும் கச்சிதம். கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் விஸ்வரூபம், வேற, வேறு லெவல்.
முன்னாள் எம்.எல்.ஏ.வாக ஆடுகளம் நரேன். ஆரம்பத்தில் அமைதி, அடுத்தடுத்த காட்சிகளில் அதிரடி என இருவேறு நிலையிலும் ‘அக் மார்க்’ நடிப்பில் பிரகாசிக்கிறார். நரேனின் மகனாக மணிகண்டன், ஐஸ்வர்யாவின் தம்பியாக அபிஷேக் கதைக்களத்தில் நிற்கிறார்கள்.
கூலிப்படை கும்பலில் அந்த போதை ஆசாமியும் டென்ஷன் பார்ட்டியும் பயமுறுத்துகிறார்கள். கார் பயணத்திலேயே பெரும்பாலான காட்சி என்றாலும், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாயின் கேமரா திகில் படுத்தி விடுகிறது.
ஜிபரானின் பின்னணி இசை திரைக்கதையோடு இணைந்து நெஞ்சை வருடுகிறது.
கார் பயணத்தை மையப்படுத்தி கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிங்ஸ்லி, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை கிளைமாக்ஸ் வரை தக்க வைத்துக் கொள்கிறார். ஆஸ்பத்திரியில் உயிர் பிழைத்த ஆடுகளம் நரேன் அருகில் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்காரும்போதே சஸ்பென்ஸ் கட்டவிழ்வது அற்புதம்.
வெறும் கார் பயணம் தான் படமா? என்ற கேள்வி நம் மனதில் எழும் போது எதிர்பார்க்காத திருப்புமுனை கதையில் வர, அதை தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.
‘டிரைவர் ஜமுனா’ வேகம். கூடவே விவேகம். அதனால் சீரான பயண பயணம் சாத்தியமாகி விடுகிறது