திரை விமர்சனம்

நெடுநீர் திரை விமர்சனம்

சிறுவயதில் பிரிந்த நாயகன்-நாயகி இருவரும் 8 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும்போது நாயகன் ரௌடி. நாயகி நர்ஸ்.
ரௌடி தொழிலை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி நாயகி சொல்ல, நாயகனும் தனக்கு ஆதரவு அளித்த தாதாவிடம் இருந்து விலக முடிவு செய்கிறான். இப்போது அவனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து நாயகியுடன் நாயகன் சேர்ந்தானா? இல்லையா? என்பதே இந்த ‘நெடுநீர்’.

நெடுநீர் என்பது பரந்து விரிந்த கடலைக் குறிக்கும். காதலை கடடலோடு ஒப்பிட்டு கதைப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனாக அறிமுக நடிகர் ராஜ்கிருஷ். ஆரம்பத்தில் அமைதி காட்டும் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களம் என ஆச்சரியப்படுத்துகிறார். முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை இந்துஜா, இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

தாதா அண்ணாச்சியாக நடித்திருக்கும் மா.சத்யா முருகன் அந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். நடிப்போடு சண்டைக்காட்சியிலும் சாகசம் செய்கிறார்.
நண்பனின் கொலைக்காக நாயகனை பழி தீர்க்கத் துடிக்கும் எச்.கே.மின்னல் ராஜா உள்ளிட்ட இளைஞர்கள் தங்கள் கேரக்டர்களில் நிஜமாகவே பயமுறுத்துகிறார்கள்.

லெனின் சந்திரசேகரனின் ஒளிப்பதிவில் கடலூரும் கடலும் அழகோ அழகு. ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒ.கே. ரகம்.

எழுதி இயக்கியிருக்கும் கு.கி.பத்மநாபன் காதல் கதையை ரவுடியிசம் பின்னணியில் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். புதுமுகங்களை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கதையை மிக இயல்பாக சொல்லியிருப்பவர், காதல் கடல் போன்றது என்பதையும்அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ரவுடி பின்னணியில் ஒரு காதல் கதையை ரசிக்கும்விதத்தில் சொல்லியிருப்பதில் நெஞ்சுக்கு நெருக்கமாகி விடுகிறது, இந்த நெடுநீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *