கேமரா எரர் பட விமர்சனம்
திரைத்துறையின் திரை மறைவில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை அப்பட்டமாய் காட்டும் படங்களின் வரிசையில் அடுத்த வரவு.
காதல் கதையொன்றை கிளுகிளுப்பான காட்சிகளுடன் படமாக்க விரும்பும் புதுமுக இயக்குநர் ஒருவர் பசுமையான மலைக்கிராமத்துக்கு தனது படக்குழுவோடு செல்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மது பாட்டில் வந்து இறங்க, உற்சாகம் கரைபுரள்கிறது.
தான் எடுக்கப்போகும் படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக சொல்லி கூட்டிச் செல்லும் பெண்ணை சதை நாயகியாக மட்டுமே பார்க்கும் அந்த இயக்குநர், அவளை அடிக்கடி அனுபவிக்கிறார். சொன்னபடி அவளுக்கு கதாநாயகி வாய்ப்பு தராமல் இன்னொரு பெண்ணை கதாநாயகியாக்கி ஷூட்டிங் நடத்தத் தொடங்க, அவள் சூடாகிறாள். இயக்குநருக்கும் அவளுக்கும் தகராறு முற்றுகிறது.
இது ஒரு புறமிருக்க, ஹீரோயினாக நடிக்க வந்த பெண்ணிடம் ஹீரோ அப்படியும் இப்படியும் நடந்து கொள்ள, உடனிருக்கும் இன்னொருவரும் அவளை ஆல்கஹால் வாசனையோடு அள்ளியணைக்கிறார்.
இன்னொரு பக்கம், படப்பிடிப்புக்காக தேர்வு செய்த வீட்டில் சிலபல அமானுஷ்ய சம்பவங்கள் பரபரப்பாக நடக்கத் தொடங்குகின்றன. அந்த சம்பவங்களால் படக்குழுவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது? நினைத்தபடி படம் எடுக்க முடிந்ததா? என்பதே மீதிக்கதை.
படத்தை இயக்கியிருக்கும் அகரனே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இயக்குநர்கள் சிலர் நடிகைகளை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கொஞ்ச நேரம் படப்பிடிப்பு, அடுத்த நிமிடமே படுக்கை விரிப்பு என தனக்கான காட்சிகளை அமைத்திருக்கிற அகரனை பாராட்டலாம்.
வாய்ப்புக்காக வளைந்து கொடுக்கிற ஹரிணியின் வளைவு நெளிவுகள் மார்கழி குளிரையும் தாண்டிய கதகதப்பு.
ஹீரோயின்களில் ஒருவராக வரும் வட இந்தியப் பெண் சிம்ரன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பிலும் தேறலாம்.
சுதிர், பிரபாகரன் கதைக் களத்துக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
லைட் மேனாக வரும் இணையதள பத்திரிகையாளர் ராஜேஷூக்கு நடிப்பதற்கு பெரிதாய் வேலையில்லாத கேரக்டர். என்றாலும் தேவையில்லாத கேரக்டர் இல்லை.
படத்தின் முன்பாதியை மது, மாது என பெண்களை வேட்டையாடும் திரையுலகின் இருண்ட பக்கத்தை காட்ட பயன்படுத்திக் கொண்ட இயக்குநர், இடைவேளைக்குப் பிறகு பேய்களை கட்டவிழ்த்து விடுகிறார். பேய்களின் வரவைத் தொடர்ந்து உயிர்ப்பலி என திக் திக் பின்னணியில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.
இருட்டுக்குள் நடக்கும் பெரும்பாலான காட்சிகளில் வெளிப்படுகிறது ஒளிப்பதிவாளரின் திறமை.
வித்தியாசமான படைப்புகளை விரும்புவோர் பார்த்து வைக்கலாம்.