தென் சென்னை -திரை விமர்சனம்
மனைவியின் மறைவுக்கு பிறகு சென்னை வரும் தொழிலதிபர் தேவராஜன் ஹோட்டல் தொழிலில் பிரபலமாகிறார். இந்நிலையில் மதுரையில் ஒரு விழாவுக்கு சென்றவரை அங்கு சாப்பிட்ட உணவின் ருசி வெகுவாய் கவர, அந்த உணவை சமைத்த அண்ணன் தங்கையையும் தன்னோட அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். அவர்களை தனது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.தேவராஜன் மறைவுக்கு பிறகு அவரின் பேரன் ரங்கா ஹோட்டல் தொழிலை சிறப்புற நிர்வகிக்கிறார்.
அதே ஹோட்டல் மாடியில் பிளாக் காட் என்ற பெயரில் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அவ்வப்போது சட்டவிரோத செயல்கள் சைலண்ட்டாக நடந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் இவர்களின் கைக்குள் ரங்காவின் ஹோட்டல் சென்று விடுகிறது. தங்கள் ரகசிய பண பரிமாற்றத்தை நடத்தும் இடமாக ஹோட்டலை பயன்படுத்துகிறார்கள். இங்கு பணம் கை மாறுவது தெரிந்த ஒரு கொள்ளை கும்பல் பணம் கைமாறும் நேரத்தில் அதைக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்கிடையே அந்த செக்யூரிட்டி நிறுவனம் ஹோட்டலையும் தங்கள் வசமாக்க முயல…
ஹோட்டலை தங்கள் வசமாக்க ரங்கா என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார் என்பது மீதிக் கதை.
இதற்குள் அனாதையாக விடப்பட்ட குழந்தை, அந்த குழந்தையின் மூலம் வரும் சிக்கல்கள் தனி டிராக் ஆக இணைந்து அதுவும் படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறது.
படத்தை இயக்கி தயாரித்த ரங்காவே நாயகனாகவும் நடித்திருக்கிறார். நடிப்பை பொறுத்தவரை சிறு பதற்றங்கள் எட்டிப் பார்க்கவே செய்கிறது. என்றாலும் காதலியின் குடும்பத்துக்கு டார்ச்சர் தரும் வில்லனை அவர் மேற்கொள்ளும் அந்த கிளைமாக்சில் அதிரடி நாயகனுக்குரிய அட்டகாசம் நடிப்பில் மெருகேறி தெரிகிறது. இந்த இடத்தில் நடிப்பிலும் தேவையான ரியாக்சன் எட்டிப் பார்க்கிறது.
டாக்டராக வரும் நாயகி ரியாவுக்கு நடிப்பு இயல்பாகவே வருகிறது. அனாதை இல்லத்தில் தன்னிடம் குழந்தை பற்றி நாயகன் துருவித் துருவி கேட்கும் இடத்தில் சட்டென ஒரு கோபம் தெரிகிறதே, அந்த இடத்தில் ரியா, நடிப்பில் சூப்பரய்யா.
செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தும் நிதின் மேத்தாவின் வில்லன் நடிப்பில் ஒரு கம்பீரம் தெரிகிறது.
அம்மா நடிப்பில் சுமா, சும்மா இல்லை, அதற்கும் மேலே.போலீஸ் அதிகாரியாக வரும் திலீபன் மேல் அதிகாரியின் நாசூ க்கான மிரட்டலுக்கு பதில் சொல்லும் இடத்தில் கரகோஷம் வாங்குகிறார்.
ஜென் மார்டினின் பின்னணி இசையும், சரத்குமாரின் கேமராவும் இந்த கதை களத்தோடு இயல்பாக பொருந்தி போகின்றன.அறிமுக இயக்குனர் ரங்கா ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்த விதத்தில் சபாஷ் பெறுகிறார். காட்சிகளின் மெதுவான போக்கை தவிர்த்திருந்தால் அதிரடி சஸ்பென்ஸ் பட ரேஞ்சுக்கு இந்த தென் சென்னையும் பேசப்பட்டிருக்கும்.
.