சினி நிகழ்வுகள்

விமல் நடிக்க, விஜய்சேதுபதி கதை வசனம் எழுதிய படமே ‘குலசாமி’ முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்

விமல்-தான்யா ஹோப் நாயகன்-நாயகியாக நடிக்க, வில்லனாக டைரக்டர் சரவணசக்தியின் மகன் சூர்யா அறிமுகமாகும் படம் குலசாமி. சரவண சக்தி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் வரும் 21-ந்தேதி திரைக்கு வருவதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் சரவண சக்தி பேசுகையில், இப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம்’’ என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ‘‘நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்ற போதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்’’ என்றார்.
காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசுகையில், ‘‘நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான். படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன் ஆனால் அது மிகக் கடினம் என்பதை புரிந்து கொண்டேன். என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான். ஆனால் சமுகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன். இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்து அனைவரிடமும் சேர வேண்டும்’’ என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், ‘‘இயக்குநர் சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர். இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோஷன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோஷன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவிர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *