அயலி இணையத் தொடர்
பெண் பருவமெய்திய இரண்டொரு மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் வீரபண்ணை. இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் பத்தாவதை எட்டுவதற்குள் வயதுக்கு வந்து விடும் சூழலில், அவர்கள் கல்விக் கனவு பறிக்கப்பட்டு விடுகிறது.
அந்த ஊரின் 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீக்கோ நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது ஆசை நிறைவேறாது என்று சக தோழிகள் சொல்ல, தான் வயதுக்கு வந்ததை மறைத்து தனது கிராமத்து கட்டுப்பாடுகளை தகர்ந்தெறிந்து தனது இலக்கை நோக்கி முன்னேறத் துடிக்கிறார்.
பருவமடைந்ததை மறைத்து அவரால் படிப்பில் சாதிக்க முடிந்ததா? அவரது செயல்பாடுகளினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? என்பது 8 எபிசோடுகள் கொண்ட சமுதாய பிரக்ஞையுடன் கூடிய கதைக்களம். இந்த வகையில் பிற்போக்கு சிந்தனையோடு இருக்கும் அனைவருக்கும் முற்போக்கு சிந்தனைகளை புகட்டுகிறாள், இந்த ‘அயலி’.
கதை 1990ம் கால கட்டத்தில் நடக்கிறது. பெண் கல்விக்கு, பெண்ணுரிமைக்கு ஆதரவான திரைக்கதை, தொடக்கமுதலே பார்வையாளனை கதையோடு நெருக்கமாக்கி விடுகிறது.
குறிப்பாக, பெண் பருவமெய்தலை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயம் என்று இன்னும் பழமையோடு வாழும் மக்களுக்கு ஆணியடித்தது போல் அறிவுரையும் தரத்தவறாத திரைக்கதை பெரும்பலம்.
தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் வரும் அபிநயஸ்ரீயை கதைக்களத்தில் இருந்து எந்தவொரு இடத்திலும் பிரித்தெடுக்க முடியவில்லை. அப்படியோர் இயல்பான நடிப்பில் நெஞ்சில் நிறைகிறார். தனது டாக்டர் கனவை நோக்கி தைரியமாக பயணிப்பது, இடையில் வரும் தடைகளை தகர்த்தெறிந்து தொடர்நடை போடுவது என கனவான அந்த கதாபாத்திரத்தை நடிப்பில் சாத்தியமாக்கி இருக்கிறார். குறிப்பாக சட்டையில் இருக்கும் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு ‘இங்க்’ என்று புன்னகை தவழ சொல்லி விட்டு கடந்து போகும் இடத்தில் நடிப்பில் ஒருகை பார்க்கிறாள், இந்த தமிழ்ச்செல்வி.
தமிழ்ச்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல் இன்னொரு நடிப்பு அற்புதம். காலம்காலமாக கனவுகளை மறைத்து கணவனே உலகம் என்று வாழும் பெண்களின் பிரதிநிதியாக ஆரம்பத்தில் வலம் வருபவர், ஒருகட்டத்தில் ஆரம்பத்தில் மகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்குவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
தமிழ்ச்செல்வியின் அப்பாவாக அருவி மதன், பாசக்கார தந்தையாக மனம் பதிகிறார். அதேநேரம் பெண்களை ஒடுக்கும் ஆண் திமிரை வெளிப்படுத்தும் இடங்களில் அந்த நடிப்பும் உடல் மொழியும் அத்தனை அழகு.. இவரை தமிழ்சினிமா என் இன்னும் முழுமையாக பயன்படுத்த வில்லை என்பது கேள்வி.
மக்களை எப்படி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதை தனது வேடத்தின் மூலம் மிக தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார், வில்ல அரசியல்வாதியாக வரும் லிங்கா. சிங்கம்புலி, வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி ஆகியோர் வரும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்்திரங்களும் இந்த கிராமத்து கதையின் இயல்பான வார்ப்புகள். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் பக்ஸ் சிறப்பு கவனம் பெறுகிறார்கள். ஒளிப்பதிவாளர் ராம்ஜியுடன் கைகோர்த்த ரேவாவின் இசை கதைக்களம் நிகழும் கிராமத்துக்குள் நம்மை கைபிடித்து அழைத்து சென்று விடுகிறது.
வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் தீட்ட, இயக்கியிருக்கிறார் முத்துக்குமார். ஒரு கதையை 8 பாகங்களாக மிக சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியிருப்பதில் ஒட்டுமொத்த டீமும் ஜெயித்திருக்கிறார்கள். அதை சுவாரஸ்யமாக நகர்த்தியும் சென்ற இவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதிலும்,பகுத்தறிவு சிந்தனையுடன் எழுதப்பட்ட வசனங்கள் தொடரின் பெரும் பிளஸ்.
கதை எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், பெண் கல்விக்கு ஆதரவாக களமிறங்கி அப்படியே சம்பிரதாயத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் சூடு வைத்திருக்கிறார்.
ஜி 5 இணைய தளத்தில் வரும் ‘அயலி’ அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்.