சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

உடன்பால் திரை விமர்சனம்

நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் என்பது பைபிள் மொழி. படத்தின் பொது மொழியும் அது தான்.
சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு வீடு வாங்கும் சார்லி, மகன் லிங்கா, மருமகள் அபர்ணதி பேரன் தர்ஷித் சந்தோஷ் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
தொழில் சரியில்லை என்பதால் அந்த வீட்டை விற்க நினைக்கிறார் மகன் லிங்கா. அதற்காக தங்கை காயத்ரியையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். முடிவு என்னாகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்.
முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்காவுக்கு தன் சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்று நினைக்காமல் அப்பாவின் சொத்தை விற்று முன்னேற நினைக்கும் கதாபாத்திரம். பாத்திரமாகவே மாறியிருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இயலாமை இயல்பாக வெளிப்படும் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார்.
அவர் மனைவியாக வரும் அபர்ணதியின் நடிப்பும் சிறப்பு.
காயத்ரியும் அவர் கணவராக வரும் விவேக் பிரசன்னாவும் நடிப்பில் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.
பொறுப்பான குடும்பத்தலைவராக வரும் சார்லி, அவரது சகோதரியாக வரும் தனம், சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா கேரக்டர்களில் வலுவாக காலூன்றி நிற்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் மயில்சாமி, மயில்சாமி தான்.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும் சக்தி பாலாஜியின் இசையும் படத்தின் பக்க பலம்.
சீரியஸ் கதையை, சிரிக்கச் சிரிக்க இயக்கிய கார்த்திக் சீனிவாசன், கடைசியில் சார்லியின் பேரனை வைத்து நெத்தியடியாக ஒரு கருத்தைச் சொல்லி வெற்றிக்கோட்டை தொட்டு விடுகிறார்.
டிசம்பர் 30 முதல் ஆஹா இணையதளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *